இந்த வலையில் தேடவும்

Tuesday, July 27, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள் -IV



நாம் முந்தைய பதிவுகளில் பார்த்த அணுக்கரு விசைகள் (வலுமிக்க மற்றும் குறைந்த) அணுக்கருவின் உள்ளே மிக மிக ரகசியமாக செயல் படுபவை. ஆனால் இப்போது நாம் பார்க்கப் போகும் 'மின் காந்த விசை' (electro magnetic interaction) நமக்கெல்லாம் மிக மிகப் பரிச்சயமான ஒன்று. நாமெல்லாம் T.V யில் 'மானாட மயிலாட' பார்பதற்கும் (electric current) ரோட்டில் நடந்து செல்பவர்களை அலட்சியப் பார்வை பார்த்த படி காரை ஓட்டிச் சென்று (friction) 'Cafe Coffee day' யில் காபியை உறிஞ்சிக் குடிப்பதற்கும் (grip) இந்த ஐயா தான் துணை புரிகிறார்.
எனவே அடுத்த முறை நீங்கள் A.C. ரூமில் உட்கார்ந்து இன்னும் எப்படியெல்லாம் காசு சேர்க்கலாம் என்று நினைக்கும் போது இந்த பாவப்பட்ட மின் காந்த விசை அவர்களை அல்லது நமக்காக வேண்டி இதையெல்லாம் கன கச்சிதமாகப் படைத்த கடவுளை கொஞ்சம் நினைத்துக் கொள்ளவும்

Ok.. அணுக் கருவின் உள்ளே எதற்காக ப்ரோடான்களும் நியூட்ரான்களும் குடும்பம் நடத்துகின்றன என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

ஆனால் இந்த எலக்ட்ரான்கள் என்பவை எதற்கு? ப்ரோடான்களும் நியூட்ரான்களும் அணுக்கருவை விட்டு வெளியே வந்தால் ரொம்ப நேரம் இருக்காது. சிதைந்து விடும்.. (சரியான, 'படி தாண்டாப் பத்தினிகள் அவை ...) எனவே 'வெளி உலகத்துடன்' தொடர்பு கொண்டு தான் இருப்பதை உலகுக்குத் தெரிவிக்க 'அணு' விற்கு தூதுவர்கள் தேவை... (இதற்கு தான் எலக்ட்ரான்கள்)

அதாவது , ஓர் அணு இன்னொன்றுடன் சேர்ந்து மூலக்கூறு ஆவதற்கும்
ஒரு தனிமத்தின் மூலக்கூறுகள் இன்னொரு தனிமத்தின் மூலக்கூறுகளுடன் சேர்ந்து 'சேர்மங்கள்' ஆவதற்கும் எலக்ட்ரான்கள் தேவை.. (உதாரணமாக நாமெல்லாம் டெய்லி பயன்படுத்தும் நீர், உப்பு இவை, இரண்டு வெவ்வேறு அணுக்கள் எலெக்ட்ரான்களின் மூலம் கை கோர்த்துக் கொள்வதன் மூலம் கிடைப்பவை)

நாம் ஏன் வெளி உலகுடன் தொடர்பு கொள்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.. நமக்கு ஏதேனும் வேண்டும் என்ற போது தானே ? ஓர் அணு என்பது இன்னொன்றுடன் தேவை இல்லாவிட்டால் சேராது. (ரொம்ப மூடி டைப்) நமக்கெல்லாம் மூன்று விதமான ஆசைகளைக் கொடுத்து உலகில் முட்டி மோதிக் கொள்ளுங்கள் என்று இறைவன் விதித்து விட்டதைப் போல
அணுக்களுக்கும் பாவம் எலெக்ட்ரான்களைக் கொடுத்து இயற்கை ஆட்டுவிக்கிறது.
நம் வீட்டில் காபிப் பொடி தீர்ந்து விட்டால் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டி ' மாமி கொஞ்சம் காபிப் பொடி கிடைக்குமா?" என்று கேட்பது போல எலெக்ட்ரான் தாகம் கொண்ட அணுக்கள் பக்கத்து
அணுவிடம் 'உனக்கு தான் நிறையே இருக்கே, ரொம்ப தான் 'பிகு' பண்ணாதே, ஒண்ணோ ரெண்டோ கொடு , கடனா தானே கேட்கறேன்?' என்று கேட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளும்... (கையெழுத்து எல்லாம் போடுமா தெரியாது)

இப்போது (நாம் ஏற்கனவே ஹை ஸ்கூலில் படித்த) சில விஷயங்களை நினைவு கூர்வது அவசியம்.. ஒன்று: எலக்ட்ரான்கள் அணுக்கருவை விட்டு மிக மிக தூரத்தில் சுற்றுகின்றன. (உதாரணமாக அணுக்கருவை ஒரு கால் பந்து என்று கொண்டால் அணு என்பது ஒரு கால்பந்து மைதானம். எனவே அணுவிலும் பெரும்பாலும் வெட்ட வெளி தான் உள்ளது. ஏன் இவ்வளவு தூரமாகச் சுற்றுகிறாய்? நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? என்று எப்போதாவது ஒரு எலக்ட்ரானை பார்த்தால் மறக்காமல் கேட்கவும்..)
இரண்டு: ப்ரோடான்களும் நியூட்ரான்களும் மேலும் பிளக்கக் கூடியவை.( ஒரு ப்ரோடானை போஸ்ட் மார்டம் செய்து பார்த்தால் அதற்கு உள்ளே 'க்வார்கு' கள் (QUARK ) களி நடனம் செய்வதாக அறிவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள் (உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?) ('க்வார்கு' கள் பற்றி இன்னொரு பதிவில்....) ஆனால் இன்னும் எந்த ஆசாமியும் இதுவரை எலக்ட்ரானை நோண்டி உள்ளே பார்க்கவில்லை. நான் பார்க்கிறேன் என்று நீங்கள் கிளம்பி விட வேண்டாம்.. இதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று எலக்ட்ரான் ப்ரோடானை விட ஆயிரம் மடங்கு சிறியது... (ப்ரோடானைஎல்லாம் நாம் Microscope மூலம் கூட பார்க்க முடியாது.. ஒரு அனுமானத்தின் பேரில் சொல்வது தான்) இரண்டாவது எலக்ட்ரான் செய்யும் மாயா-ஜாலம்...

உதாரணமாக நீங்கள் ஓர் எலக்ட்ரானைப் பிடித்துச் சிறையில் அடைத்தால் அது ஒரு அலையாக மாறி
சிறைக் கம்பிகளிடையில் புகுந்து எஸ்கேப் ஆகி விடக் கூடும்.(ஆம். இந்த மாதிரி சில விஷயங்கள் அறிவியல் மேதாவிகளின் சிலரின் கர்வத்திற்கு சில சமயம் 'Speed Brake ' போடுகின்றன.) நம் எலக்ட்ரான் சில சமயம் ஒரு பொருளாக (particle) உள்ளது, சில சமயம் அலையாக (wave )ஓடுகிறது. இது எப்படி சாத்தியம் என்று Mr .கடவுளைக் கேட்கவும்....எனவே நீங்கள் அணுவைப் பார்க்கும் போது அது ஒரு விறகு-அடுப்பை புகை சூழ்ந்து இருப்பதைப் போலத் தெரியலாம்.

இந்த 'விந்தை வீரர்' களை நம் அணுவிடம் பந்தப் பட்டு அணுக் கருவை சதா சுற்றி வரச் செய்வது நமது 'மின் காந்த விசை' .... அதாவது அணுக் கருவில் குடி கொண்டுள்ள ப்ரோடான் அரசிகளையும் வெளியே சுற்றும் எலெக்ட்ரான் வீரர்களையும் காதலில் விழ வைத்து 'தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்' என்று ஆவேசத்துடன் பாட வைக்கும் கவர்ச்சி விசை... (static force )

அதாவது , பொதுவாக ஓர் அணுவில் ப்ரோடான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமமாகவே உள்ளது. (இயற்கை ஆண்களையும் பெண்களையும் சம எண்ணிக்கையில் படைப்பது போல) அப்படிப் பட்ட அணு, 'நமக்கு ஏன் இன்னொருத்தர் வம்பு"? என்று சும்மா இருக்கும்.(electrically neutral ) இந்த இடத்தில் இயற்கை ஒரு விதியை நியமித்து உள்ளது. அது :-

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் 'மின் காந்த விசை' ஒரு ப்ரோட்டானையும் (+) எலக்ட்ரானையும்(-) ஈர்ப்பது மட்டுமின்றி
எலக்ட்ரானையும்(-) எலக்ட்ரானையும்(-) விலக்குகிறது. அதாவது ஓர் எலக்ட்ரான் இன்னொன்றை தனக்கு எதிரியாகப் பார்க்கிறது.
எலக்ட்ரான்கள் அணுக்கருவைச் சுற்றுகின்றன என்று பொத்தாம் பொதுவாக நாம் சொன்னாலும் அது , ஒரு ஏழெட்டு பெண்கள் நவ- கிரகத்தை கோவிலில் சுற்றி வருவது போல் (ஒரே சுற்றுப் பாதையில்) இல்லாமல் நவ கிரகங்கள் சூரியனை சுற்றுவது போல் வெவ்வேறு 'ஆற்றல் மட்டங்களில்' (energy levels ) சுற்றுகின்றன.. அதாவது, எலக்ட்ரான்-எலக்ட்ரான் பகை காரணமாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் எலக்ட்ரான்கள் ஒரே ஆற்றல் மட்டத்தில்(quantum states ) இருக்க முடியாது. (exclusion principle )
அதாவது முதல் மட்டத்தில் 2 , இரண்டாவதில் 8 , மூன்றாவதில் 18
எலக்ட்ரான்கள் என்று ஒரு கணக்கில் இருக்க முடியும் (சண்டையில்லாமல்)
இதனை இப்போது ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கு ஒப்பிடுவோம்.
கீழே Ground -floor இல் ஒனர் (அணுக்கரு) இருப்பதாக் கொள்வோம்.
முதல் தளத்தில் இரண்டு அறைகளும் இரண்டாவது தளத்தில் 8 அறைகளும், மூன்றாவதில் 18 ம் உள்ளதாக் கொள்வோம். (etc)
நம் ஒனர் ஒரு carzy fellow! அவரின் கொள்கைப் படி ஒன்று ஒரு தளம் முழுதும் காலியாக இருக்க வேண்டும். இல்லை முழுவதும் நிரம்பி இருக்க வேண்டும். அதாவது முதல் தளத்தில் ஒரு அறை மட்டுமே நிரம்பி இருந்தால் எப்பாடு பட்டாவது இன்னொருவரை அங்கே(இரண்டாவது அறைக்கு) கூட்டி வந்து வாடகைக்கு வைத்து விடுவார். அதே போல், இரண்டாவது தளத்தில் ஒரு அறை மட்டும் நிரம்பி இருந்தால் அங்கே இருப்பவரை ஏதாவது சாக்கு போக்கு சொல்லி வெளியே துரத்தி விட்டு விடுவார்.

அதே போல் ஓர் அணு தன் (எல்லா) ஆற்றல் மட்டங்களில் எலக்ட்ரான்கள் முழுவதுமாக நிரம்பி இருக்க வேண்டும் அல்லது காலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. (What a perfectionnist !) ஒரு சில அணுக்களில் இந்த 0 or 100 % அமைப்பு தற்செயல் ஆகவே இருந்து விடுகிறது.உதாரணம்: ஹீலியம்(அணு) :இதற்கு இரண்டு ப்ரோட்டான்கள். இரண்டு ப்ரோட்டான்கள் தரும் நேர் மின் விசையை சரி கட்ட இரண்டு எலக்ட்ரான்கள்....இந்த இரண்டு எலெக்ட்ரான்களும் அதன் முதல் ஆற்றல் மட்டத்தில் (s) நிரம்பி விடுவதால் அதற்கு எலக்ட்ரானை இழக்கவோ ஏற்கவோ வேண்டாம். ஆகவே தான் அது ,பிறர் வம்புக்குச் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று உள்ளது. வேறு எந்த தனிமத்துடனும் சேராது. (ஒரு ஹலோ கூட சொல்லாது ) இதை அறிவியல் 'உம்மணா மூஞ்சி' வாயு (Inert gas ) என்கிறது. இதே போல் தான் இரண்டாவது மட்டத்தில் எட்டு எலக்ட்ரான் நிரம்பிய 'நியான்' மந்த வாயு.. ஆனால் இந்த அதிர்ஷ்டம் எல்லா அணுக்களுக்கும் கிடைப்பதில்லை..
உதாரணம்: ஹைட்ரஜன் :1 ப்ரோடான் 1 எலக்ட்ரான்.
அதற்கு இரண்டாம் கூடு நிரம்புவதற்கு இன்னும் 1 எலக்ட்ரான் தேவை.எனவே அது இன்னொரு ஹைட்ரஜன் அணுவுடன் சேர்ந்து இரண்டு அணுக்களும் தம் எலக்ட்ரானைப் பகிர்ந்து கொள்ளும். இரண்டுக்கும் தமது கூட்டில் இரண்டு எலக்ட்ரான் இருப்பதாக ஒரு போலி கௌரவம் கிடைக்கும் ....இந்த அமைப்பு ஒரு
'ஹைட்ரஜன் மூலக்கூறு ' (இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள்) எனப்படும். பொதுவாக ஒரு ஹைட்ரஜன் அணுவை தனித்துப் பார்ப்பது கடினம்... அது இன்னொன்றுடன் சேர்ந்து 'ஹைட்ரஜன் மூலக்கூறாகவே இருக்கும்.

தம் கூடுகளை நிரப்பும் அல்லது காலி செய்யும் முயற்சியின் போது அணுக்கள் எலக்ட்ரானை இழக்கவோ , ஏற்கவோ செய்யும்.. எனவே எலக்ட்ரான்களின் எண்ணிக்கை கருவின் உள் உள்ள ப்ரோடான் களை விட கூடவோ குறையவோ செய்யும். கூடினால் அந்த அணுவிற்கு எதிர் மின் சுமை கிடக்கும் (negative charge ) குறைந்தால் நேர் மின் சுமை கிடக்கும் (positive charge ) இந்த அமைப்பை நாம் 'அயனிகள்' என்கிறோம்.. (Ions ) எனவே வேதியியல் வினைகளில் பங்கு கொள்பவை அயனிகளே அன்றி அணுக்கள் அல்ல...
OK ..

இந்த விசைக்கு ஏன் 'மின் காந்த விசை' என்று பெயர் ? காந்தம் எங்கிருந்து வந்தது? என்றால் , முதலில் மக்கள் காந்த விசை -யும் மின் விசையும் வேறு வேறு என்று நினைத்தனர். "பாரடே" என்பவர்
ஒரு காந்தத்தின் பக்கத்தில் ஒரு மின் கடத்தும் கம்பியை கொண்டு சென்றால் அதில் மின்சாரம் வருவதையும் , மின்சாரம் பாயும் கம்பியின் அருகில் வைக்கப்படும் காந்த ஊசி விலகுவதையும் கண்டு பிடித்த் பின் இரண்டும் ஒரே விசை தான் என்று தெரிந்தது.....

மேலும் இந்த விசை நிலையான 'ப்ரோடான்-எலெக்ட்ரான்' களுக்கு நடுவே செயல் படும் போது 'நிலை' விசை (electro magnetic static force ) எனவும் ஓடுகின்ற எலக்ட்ரான் களால் ஏற்படும் மின் காந்த விசையின் போது இயக்க விசை (electro magnetic radiation ) எனவும் கூறப் படுகிறது.

விசைகளில் நான்காவதாக , ஆனால் முக்கியமானதாகக் கருதப்படும் 'ஈர்ப்பு விசை' பற்றி அடுத்த பதிவில்..



~சமுத்ரா


Thursday, July 22, 2010

பிதாமகர்...



இன்டர்நெட்டில் தியாகராஜர் கீர்த்தனைகள் எல்லாம் நிறையக் கிடைக்கின்றன ....


ஆனால் கர்நாடக இசையின் பிதாமகர் என்று கூறப்படும் 'புரந்தர தாசர்'
கீர்த்தனைகளைப் பார்ப்பது அரிதாக உள்ளது.



புரந்தர தாசர் கீர்த்தனைகள் பெரும்பாலும் 'இது தான் ராகம் , இது தான் தாளம்' என்று வகைப் படுத்தப் படாமல் உள்ளன. (தியாகராஜர் கீர்த்தனைகள் வரிக்கு வரி 'notation' கூட மாற்றமில்லாமல் பாடப் பட்டு வருகின்றன... )எனக்குத் தெரிந்து புரந்தர தாசரின் ஒரே கிருதி, சம்பந்தமே இல்லாத இரண்டு மூன்று ராகங்களில் கச்சிதமாகப் பாடப் படுகிறது.. சாகித்யத்திலும் கணிசமான வேறுபாடுகள் காணப் படுகின்றன..(இது ஏனென்று தெரியவில்லை... அவருக்குப் பின் வந்தவர்கள் ராகங்களை அமைத்திருக்கலாம்..)



'தய மாடோ' என்ற கல்யாணி ராகக் கீர்தனை ஒன்று உள்ளது.. அதை எங்கள் பெரியப்பா 'எத்தனை நாள் தான் 'ஜொய்' என்று கல்யாணியிலேயே பாடுவது?என்று அமிர்த வர்ஷினியில் பாடிக் காட்டினார். நன்றாக இருந்தது.


எனக்கு மிகவும் பிடித்த ஒரு தாசர் கீர்த்தனை இந்தப் பதிவில்...மக்களே! இறைவனைப் பூஜிக்க ஆடம்பரமான பூஜைகள் தேவை இல்லை... நம் அன்றாட வாழ்க்கையையே எப்படி பூஜையாக பாவிக்கலாம் என்று கூறுகிறார் தாசர்..


ராகம்: காம்போதி

மொழி: கன்னடம்


பல்லவி


சுலப பூஜெய மாடி பலவில்லதவரெல்ல

(உடம்பில் பலம் இல்லாதவர்களெல்லாம் இந்த சுலபமான பூஜையை செய்யுங்கள்)


அனுபல்லவி

நளின நாபன பாத நளின சேவகரெல்ல

<தாமரை உந்தியனான ஸ்ரீ ஹரியின் சேவகர்களே...>


சரணம்


1. இருளு ஹச்சுவ தீப ஹரிகெ நீராஜனவு

(நீங்கள் ராத்திரி ஏற்றும் தீபமே ஹரிக்கு மகா தீபம்)

மறு உடுவ வஸ்தரவே பரம மடியு

(நீங்கள் மாற்றி உடுக்கும் உடையே பூஜைக்குரிய நல்லுடை ஆகும்)

திருகாடி தணியுவுதே ஹரிகெ பிரதெக்க்ஷனெயு

(நீங்கள் நாளெல்லாம் அலைந்து திரிவதே ஹரிக்குச் செய்யும் வலமாகும்)

ஹொரளி மலகுவதெல்ல ஹரிகெ வந்தனெயு

(புரண்டு படுப்பதே ஹரிக்குச் செய்யும் வந்தனையாகும்)(சுலப)


----------------------------------------------------------------------------------------

2. நுடிவ மாதுகலெல்ல கடல ஷயனன ஜபவு

(பேசும் பேச்செல்லாம் ஹரியின் ஜபமாகும்)

மடதி மக்களு எல்ல ஒடனே பரிவார

(மனைவி மக்களே உடன் உள்ள பக்த பரிவாரங்கள்)

நடு மனெய அங்களவே உடுப்பி பூ வைகுண்ட

(நடு வீட்டின் முற்றமே உடுப்பி பூ வைகுண்டமாகும்)

எட பலத மனெயவரே கடு பாகவதரு

(இட வலம் உள்ள வீட்டவரே நல்ல பாகவதர்கள்)(சுலப)



-------------------------------------------------------------------------------------------


3. ஹீகெ அனு தின திளிது ஹிக்குவ ஜனர பவ

(இப்படி தினமும் பாவித்து நடப்பவரின் பிறவிப்)

ரோக பரிஹாரவு முர் ஜகதி சுகவு

(பிணி அகன்று மூன்று உலகங்களிலும் சுகம் உண்டாகும்)

ஹோகுத்திதெ ஆயு பேகதிந்தலி நம்ம

(இந்தப் பிறவி கழிந்து கொண்டு உள்ளது... எனவே சீக்கிரமாக)

யோகீஷ புரந்தர விடலன நெனெ நெனெது

(யோகிகளுக்கு அரசனான புரந்தர விடலனை நினைத்து)(சுலப)

~ சமுத்ரா

Temple tour



சமீபத்தில் கர்நாடக அரசின் KSTDC 'Temple tour' Package tour சென்றிருந்தேன். உங்களுக்குப் போக விருப்பம் என்றால் இங்கே click செய்யவும். ஹொர நாடு 'அன்ன பூர்ணேஸ்வரி' கோவிலில் இருந்து 'குக்கே சுப்ரமண்யா' வரை சுற்றிக் காட்டுகிறார்கள்...


எனக்கு என்னவோ எல்லா கோவில்களும் ஒரே மாதிரி தான் தோன்றின...

ரேஷன் கடை க்யூ போல நகர்ந்து சென்றால் கடைசியில் சில நொடிகளுக்கு the so called 'தரிசனம்' ... எந்த பரவசத்தையும் காட்டாத முகங்கள்... மகனுக்கு வேலை வேண்டும் என்றோ மகளுக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்றோ கணவனின் உடல் நிலை தேறவோ வருபவர்கள்.. (கடவுளை புரோக்கர் ரேஞ்சுக்கு எப்பவோ கொண்டு வந்து விட்டார்கள்) சிலர் பிக்னிக் வந்து விட்டு, போனால் போகிறது என்று பக்கத்தில் உள்ள பிரபலமான கோயில்களுக்கு வருபவர்கள்... இன்னும் சிலருக்கு 'God is just a Hobby' ...


மூகாம்பிகா கோவிலில் க்யூவில் நகரும் போது ஒரு அம்மணி பக்திப் பரவசத்துடன் 'ஸ்ரீ சக்ர ராஜ' பாடலை (க்யூவில் இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் ) சத்தமாக பாடிக் கொண்டு வந்தார். ( அது செஞ்சுருட்டியா சிந்துபைரவியா என்றெல்லாம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை... பக்திக்கு அதெல்லாம் தேவை இல்லை தானே?) அப்போது எனக்கு அருகே இருந்த நவ நாகரிகப் பெண்மணி ஒருவர் அதைப் பார்த்து விட்டு 'This is funny no?" என்றார் தன் அருகில் இருந்தவரிடம்.. . அம்மா தாயே? எது funny? பட்டுப் புடவை மற்றும் நகைகள் மிளிர AC காரில் வந்து இறங்கி விட்டு, ஸ்பெசல் க்யூவில் ரூபாயை வீசி விட்டு , படையப்பா நீலாம்பரி மாதிரி வந்து சாமி கும்பிடுவது தான் 'funny ! 'funniest stupidity!'

தனக்கென்று எந்த வேண்டுதல்களும் இல்லாமல் "தாயே உன்னைப் பார்க்கவே வந்தேன்... உனக்கு நன்றி சொல்லவே வந்தேன்... உன் தரிசனம் ஒரு 'கால் நொடி' கிடைத்தாலும் போதும் " என்ற மனப் பான்மையுடன் கோயிலுக்கு வருபவர்கள் மிக மிகக் குறைவு... அப்படி சிலர் வந்தாலும் 'funny objects' ஆகி விடுகிறார்கள் பாவம்...


அந்த 'சில நொடி' தரிசனத்தில் நான் எதை வேண்டுவது? (கோயில் ஊழியர்கள் வேறு நம்மை என்னவோ சாமி சிலையை வேவு பார்த்து விட்டு ராத்திரி வந்து திருடி விடுபவர்கள் போல பாவித்து 'உம், போங்க போங்க என்றோ ஹோகி ஹோகி என்றோ ஜெருகண்டி ஜெருகண்டி என்றோ விரட்டி விடுகிறார்கள்)... மணிக்கணக்கில் க்யூவில் நின்று வந்தவர்களுக்கு எப்படி இருக்கும்?


tour போகும் முன்பு அம்மா 'அப்பாவுக்கு சரியாகட்டும் னு' வேண்டிக்கோ என்று கூறி அனுப்பினார். பாட்டி ' சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள் என்றார்' என் ஆபீசில் வேலை பார்க்கும் ஒரு இளைஞரோ ' செகண்ட் floor - இல் இருக்கும் அந்த' Figure ' எனக்கு செட் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள் என்று கூறி அனுப்பினார். அந்த ஒரு நொடி தரிசனத்தில் நடக்கும் அலப்பறையில் எனக்கு எல்லாமே மறந்து விட்டது... எங்கே சாமி அடுத்தவனைப் பார்த்து விடுமோ என்ற பாவனையில் முன்னே இருப்பவரைத் தள்ளி விடுகிறார்கள்.. ச்சே!


"எது கேட்பதற்குத் தகுதியானதோ அதை மற்றவர் கொடுக்க முடியாது. எதை மற்றவர் (கடவுளே ஆனாலும் )கொடுக்க முடியுமோ அது தகுதி அற்றது. "That which is asked is not worth asking...That which is worth asking cannot be given"


"மாடினைக் கோருவேனோ மகிமையைக் கோருவேனோ

நாடினைக் கோருவேனோ நலங்களைக் கோருவேனோ

ஈடிணை அற்ற ஈசா! இரத்தலின் ஈய வொண்ணா

வீடினைக் கோருவேனோ விளங்கிலேன் விளங்கிலேனே'


என்று கவிதை பாடத் தோன்றுகிறது..


~சமுத்ரா





Monday, July 19, 2010

இரட்டைப் பிறவி கிளவிகள் ....




இரட்டைக் கிளவி தெரியும்... இது என்ன இரட்டைப் பிறவி கிளவி?

'சயாமீஸ்' ட்வின்ஸ் என்று ஒன்றோடு ஒன்று ஒட்டிப் பிறக்கும் குழந்தைகளைச் சொல்வார்கள்.. (விக்கி பீடியா இங்கே) ...இவர்கள் ஓருடல் ஈருயிராக வளர்வார்கள்.... (ஒருவரைப் பிரித்தால் இருவரும் இறந்து விடுவார்கள்) ...ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல...


தமிழில் நாம் சில பிரயோகங்களை அடிக்கடி உபயோகிக்கிறோம்... அந்தப் பிரயோகங்கள் இரண்டு வார்த்தைகள் சேர்ந்ததாக இருக்கும்.. (இரண்டும் ஒரே வார்த்தையாக இருந்தால் அது இரட்டைக் கிளவி... வெவ்வேறாக இருந்தால்அது இரட்டைப் பிறவிக் கிளவி...(இது நான் வைத்த பெயர் தான்..புத்தகங்களில்தேட வேண்டாம்...))

தனியாகப் பார்த்தால் அதற்கு எந்தப் பொருளும்இருக்காது.


இரட்டைப் பிறவி கிளவிக்கு உதாரணங்கள்...

> வாட்ட சாட்டமான ஆள்... (வாட்டமான ஆள் என்றோ சாட்டமான ஆள் என்றோ சொல்வதில்லை)

> தாறு மாறாக ஓட்டினான்...

> அரசல் புரசலாகக் கேள்விப் பட்டேன்

> கரடு முரடான பாதை

> தட்டு முட்டுச் சாமான்

> தட புடலான விருந்து

> மப்பும் மந்தாரமுமாக இருக்கு

இதையே , பிரித்தால் ஒரு வார்த்தை பொருள் தருவதாகவும் இன்னொன்று இறந்து விடுவதாகவும் (முதலில் பார்த்ததற்கு கொஞ்சம் பரவாயில்லை) கொண்டால் நமக்கு சில பிரயோகங்கள் கிடைக்கும்..

> கோணல் மாணலாக எழுதாதே

> அரக்கப் பறக்க ஓடாதே

> கொஞ்ச நஞ்சம்

> சாக்கு போக்கு சொல்லாதே

>தப்புப் தண்டா

>குஞ்சு குளுவான்கள்

>மூலை முடுக்கெல்லாம் தேடினான்


இனி, பிரித்தால் இரண்டும் பொருள் தருபவை:


> காடு மேடெல்லாம் சுற்றினான்

> மூட்டை முடிச்சு

> கார சாரமான சாப்பாடு

> கையும் களவுமாகப் பிடித்தனர்

> தப்பித் தவறி கூடப் பொய் விடாதே

> கோயில் குளம் என்று சுற்றுகிறார்கள்

> குண்டும் குழியுமான ரோடு

> குறுக்கும் நெடுக்குமா நடந்தான்

> பட்டி தொட்டியெல்லாம் சென்றனர்

>மூக்கும் முழியுமாக

>வாயும் வயிறுமாக

>கண்ட துண்டமாக வெட்டு

>சொந்த பந்தம்

>சட்ட திட்டம்


யாராவது இந்த blog- ஐ தப்பித் தவறி படிக்க நேர்ந்தால் உங்களுக்குத் தெரிந்த
இரட்டைப் பிறவி கிளவிகளை 'Add' செய்யலாம்...


~சமுத்ரா

Poeple's Week





ங்கள் கம்பெனியில் (MNC தான்) வருடத்துக்கு ஒரு முறை Poeple's Week என்று ஒரு சமாச்சாரம் நடக்கும். வருடம் முழுவதும் வேலை செய்கிறாயே? இந்த ஒரு வாரம் ENJOY பண்ணு என்று நினைத்தோ என்னவோ ! (அப்போதுபல போட்டிகள், FUN EVENTS எல்லாம் நடக்கும்) ..அப்போதும் கூட எங்கள் மேனேஜர் 'நீ எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்... "but make sure your deliverables are not affected" என்று சொல்வார். [அது எப்படி சாத்தியம் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை]

அடியேன் ஒரு ஐந்தாறு போட்டிகளில் கலந்து கொண்டேன். ஒன்றிலும் பரிசு வரவில்லை... Competition களில் எனக்கு நம்பிக்கை இல்லை... நான் ஒருபோட்டியை நடத்தினால் ஒன்று கலந்து கொண்ட எல்லோருக்கும் பரிசு கொடு, இல்லை யாருக்கும் கொடுக்காதே என்று சொல்வேன்... ஏனென்றால்
"It is not selecting the best ' . It is selecting the better !"...உங்களுக்குப் பரிசு கிடைத்தால், அல்லது நீங்கள் முதலாவதாக வந்தால் மற்ற எல்லாரும் உங்களைவிட கேவலமாக Perform செய்தார்கள் என்றும் அர்த்தம்...

அழகிப் போட்டிகளைப் பற்றிய அறிவே இல்லாமல் ஏதோ ஒருஅக்ரஹாரத்தில்
பிறந்து தயிர் சாதத்தில் வளர்ந்த ஒரு பெண் உண்மையிலேயே 'உலக அழகி' யாக இருக்கலாம். 'Star Singer', 'Super Singer'
என்ற non-sense களை அறியாது வயல் வெளியில் நாற்று நடும் போது சுருதி சுத்தமாகப் பாடும் பெண் உண்மையிலேயே Super Singer ஆக இருக்கலாம்...

OK back to the topic...

பாட்டுப் போட்டி நடந்தது... நானும் கலந்து கொண்டு 'ப்ரோசேவாரெவருரா"
(ஏன் இந்தக் கொலை வெறி????) என்ற சங்கராபரணப் பாடலைப் (ராகம் அல்ல , திரைப் படம்)பாடினேன்.

முன்னே அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தவர்களில் சிலர் தலையைச் சொறிந்து கொண்டும் , சிலர் கொட்டாவி விட்டுக் கொண்டும் , சிலர் வேறுபக்கம் திரும்பிக் கொண்டும் இருந்தனர். (தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டுவிட்டோமே என்ற முக பாவனையில்)

இருந்தாலும் Prize கிடைக்கும் என்ற நப்பாசை ( ச ரி க ம ப த நி எல்லாம் நடுவில் பாடியதால்) மனதின் ஓர் ஓரத்தில் இருந்தது. முடிவுகள் அறிவிக்கும் வரை ஒரு விதமான 'Virtual Dignity' யில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.
எல்லோரும் மிக நன்றாகப் பாடியதாகவும் , புள்ளி பூஜ்ஜியம் பூஜ்ஜியம் தசமஸ்தான வித்யாசத்தில் மற்றவர்கள் தோற்று விட்டதாகவும் நடுவர்கள் நவின்றார்கள்... (இது எல்லாம் உடான்ஸ் என்று ,மனட்சாட்சி உறுத்தினாலும்)

முதல் பரிசு யாரோ 'X' இற்கும் இரண்டாம் பரிசு யாரோ 'Y' க்கும் மூன்றாவது 'Z' இற்கும் கொடுக்கப் பட்டது.

அப்போது தான் நான் பாடியதை காமெடியாக எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்று தெரிந்தது. மேலும், பரிசு கிடைக்க வேண்டும் என்றால் ஒரு பிரபலமான ஹிந்திப் பாடலை அடித் தொண்டையிலிருந்து உச்ச ஸ்தாயியில் கத்த வேண்டும் என்பதும் புரிந்தது...

~சமுத்ரா



Friday, July 16, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்-III


விசைகளில் மூன்றாவதாக இருக்கும் ' வலுக் குறைந்த' அணு விசை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.


நமது அணுக்கரு 'ப்ரோட்டான்' மற்றும் 'ந்யூட்ரான்' களால் ஆனது என்று தெரியும்.அணுக்கருவினுள்ளே நாம் முந்தைய பதிவில் பார்த்த படி, 'வலுவான அணு விசை' ('ப்ரோட்டான்', 'ப்ரோட்டான்', மற்றும் 'ந்யூட்ரான்' களை உள்ளே பிணைத்து வைக்கும் விசை,விசை-I) மற்றும் மின் காந்த விலக்கு விசை ( ஒரே மின் சுமை கொண்ட ப்ரோட்டானையும் ப்ரோட்டானையும் விலகி ஓடச் செய்யும் விசை,விசை-II) இவை இரண்டுக்கும் இடையே இடை விடாமல் 'நீயா? நானா?' என்ற யுத்தம் நடந்து வருகிறது.


பெரும்பாலும் (சிறிய அணுக்களில்) விசை-I வெற்றி பெற்று வாகை சூடி விடுகிறது.


விசை-I மிக மிக வலுவானது என்றாலும் அது கொஞ்ச தூரத்துக்குள் தான் வேலை செய்யும். (10 ^−15 மீட்டர்) [வீட்ல புலி, வெளியிலே எலி என்ற கதை தான் பாவம்] ஆனால் நம் விசை-II முடிவே இல்லாத தூரத்திற்குப் பாயும் வல்லமை கொண்டது. ( தூர்தர்ஷன் சக்திமான் மாதிரி)


ஒரு வஸ்து ஹைட்ரஜனா , ஆக்ஸிஜனா, கார்பனா, அல்லது கந்தசாமியா என்று தீர்மானிப்பது adhan உள்ள 'ப்ரோட்டான்' களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக அணுக்கருவில் ஒரு 'ப்ரோட்டான்' (மட்டும்) இருந்தால் அது ஹைட்ரஜன் ,இரண்டு என்றால் ஹீலியம், ஆறு என்றால் கார்பன் .....அந்த வஸ்து மற்ற தனிமங்களுடன் எவ்வாறு சேர்ந்து கூட்டுப் பொருளாக (உதாரணம்: தண்ணீர் , H மற்றும் O சேர்ந்தது) மாறுகிறது என்பதை அணுவின் வெளிக் கூட்டில் உலாவிக் கொண்டு இருக்கும் 'எலக்ட்ரான்கள்' நிர்ணயிக்கின்றன ....



சரி இந்த ந்யூட்ரான் என்ன செய்கிறது என்று கேட்டால் :-

(இயற்கை எந்தப் பொருளையும் காரணமின்றி படைப்பதில்லை....)


"ப்ரோட்டான்" எண்ணிக்கை குறைவாக உள்ள அணுக்கள் லேசாகவும் பெரும்பாலும் வாயுக்களாகவும் உள்ளன...அனால் நாமெல்லாம் வருவதற்கு (உயிர் வாழ்வதற்கு) நீர்மம் மற்றும் திட வடிவிலான அணுக்கள் வேண்டும்.... அதற்க்கு அணுக்கரு கனமாகவும் உள்ளே ப்ரோட்டான் களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்க வேண்டி உள்ளது.


ஆனால் இதில் ஒரு சிக்கல்... ப்ரோட்டான் -கள் எப்போதும் 'அக நானூறில்' தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிகள் போல விரக தாபத்தில் இருக்கின்றன.

'குஷி' படத்தில் 'ஜோதிகா' பாடுவது போல, "பெண்களைப் பார்த்தால் எரிச்சல் வரும்" என்ற கேஸ் தான்... எனவே ஒரு ப்ரோட்டான் இன்னொன்றை வெறுக்கிறது, விலக்கித் தள்ள முயல்கிறது... (விசை-II)அனால் , கனமான அணுக்களில் அதிக ப்ரோட்டான்-கள் இருக்க வேண்டி உள்ளது. அதே சமயம் அதன் விலக்கு விசைகளை யும் சமாளிக்க வேண்டி உள்ளது. என்ன செய்வது? இப்போது 'ந்யூட்ரான்' கள் உள்ளே வருகின்றன. நம் தலைவியின் விரக்தியை ஓரளவு தணிக்க உதவும் 'பாங்கிகள்' போல (சரியான உதாரணம் வேண்டும் என்றால் 'அரவாணிகள்' போல )...ஏனென்றால் நம் 'ந்யூட்ரான்' கள் பரமாத்மாவைப் போல ஆண்-பெண் நிலை கடந்த ஞானிகள்... (neutral charge)

இந்த 'ந்யூட்ரான்' கள் ப்ரோட்டானுக்கும் ப்ரோட்டானுக்கும் இடையே வந்து அதன் விலக்கு விசையின் வலிமையை ஓரளவு குறைக்கின்றன. கிரிக்கெட்டில் அம்பயர் போல அல்லது குத்துச்
சண்டையில் 'ரெபரி ' போல....ந்யூட்ரான் மட்டும் இல்லை என்றால் ப்ரோட்டான்-கள் செய்யும் அலப்பறையில் அணு எப்போதோ சுக்கு நூறாக உடைந்திருக்கும்.. எனவே இயற்கை ந்யூட்ரான்-களை சமாதானத் தூதர்களாக நியமித்து உள்ளது. பொதுவாக ஒரு அணுக்கருவில் ப்ரோட்டான் மற்றும் ந்யூட்ரான் களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக உள்ளது.

ஒரு தனிமத்தின் (Element) அணுக்கருவில் ப்ரோட்டான் -களும் ந்யூட்ரான்-களும் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் இருக்கும் வரை அந்தத் தனிமத்தின் அணு(கரு) 'நிலையான' தாக இருக்கிறது. (இது ஏனென்று இன்னும் சரியாகத் தெரியவில்லை )தனிம வரிசை அட்டவணையில் (periodic table ) பார்த்தால் லெட்-208, (அதாவது 126 ந்யூட்ரான் 82 ப்ரோட்டான்)

என்ற தனிமம் கனமான அதே சமயம் நிலையான அணு என்கிறார்கள்...


ந்யூட்ரான்-கள் அளவுக்கு மீறிப் போகும் போது , நம் அணுக்கரு வலுக் குறைந்த விசை வருகிறது. (எதற்கு இத்தனை அம்பயர்கள்? என்று நினைத்தோ என்னமோ)

ந்யூட்ரான்-கள் அளவுக்கு மீறிப் போகும் போது ஒரு ந்யூட்ரானை வெளியே தள்ளி விட்டு விட வேண்டியது தானே? என்று கேட்டால் அது ஆகாது. ஏனென்றால் ,கனமான தனிமத்தில் அணுக்கள் நெருக்கமாக இருப்பதால் இந்த புறக்கணிக்கப்பட்ட ந்யூட்ரான், இன்னொரு அணுக்கருவில் மோதி விட்டால் ?அது ஏற்கனவே அதிக ந்யூட்ரான்களுடன் தத்தளித்துக் கொண்டு உள்ளது... இந்த ந்யூட்ரான் அதில் போய் மோதி விட்டால் அந்த அணு சிதைந்து , ஒரு 'கட்டுப் படுத்த முடியாத 'அணுக்கருப் பிளவில்' போய் முடிந்து விடலாம். (uncontrollable nuclear fission)

இப்படியெல்லாம் ஏதாவது ஏடாகூடமாக நடந்து தொலைத்து விடாமல் இருக்க நம் ' வலுக் குறைந்த' அணு விசை உதவி புரிகிறது. அதாவது இந்த விசை செயல்பட்டு அளவுக்கு அதிகமாக உள்ள ஒரு ந்யூட்ரானை ஒரு ப்ரோட்டானாக மாற்றி விடுகிறது. இந்த மாற்றத்தின் போது ஒரு எலக்ட்ரானும் வெளி வருகிறது (இப்போதைக்கு ந்யூட்ரான் = ப்ரோட்டான் + எலக்ட்ரான் என்று வைத்துக் கொள்வோம்) ஒரு ந்யூட்ரானின் நிறை ப்ரோட்டான் + எலக்ட்ரான் னை விட கொஞ்சம் அதிகம்... ஒரு ந்யூட்ரான் , ப்ரோட்டான் ஆக மாறியதும் இந்த எஞ்சியிருக்கும் நிறை (ஐன்ஸ்டீன் சொன்ன மாதிரி E=M*C*C) ஆற்றலாக மாற்றப் பட்டு வெளியே ஓடும் எலக்ட்ரானை விரைவாக அனுப்புகிறது. இதனை அறிவியல் 'Beta Decay ' என்கிறது.இந்த மாற்றத்தின் பிறகு அந்த அணு வேறு ஒரு தனிமமாக மாறி விடுகிறது. உதாரணமாக 'டிரிடியம்' என்ற தனிமம் மூன்று ந்யூட்ரான் களை யும் ஒரு ப்ரோட்டான் -ஐயும் கொண்டு உள்ளது. அணுக்கரு வலுக் குறைந்த விசை செயல் பட்டு ஒரு ந்யூட்ரானை ப்ரோட்டானாக மாற்றி விடுகிறது. இப்போது அது இரண்டு ப்ரோட்டான் மற்றும் ஒரு ந்யூட்ரான் உள்ள 'ஹீலியம்' மாக மாறி விடுகிறது. (ஒரு எலெக்ட்ரானை உமிழ்ந்த பின்)

அதாவது

3H1 => 3He2 + 0e-1

வலுக் குறைந்த அணு விசை பற்றி ஓரளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மற்ற இரண்டு விசைகள் பற்றி அடுத்த பதிவுகளில்....


பி. கு: பதிவில் போடப் பட்ட படத்திற்கும் வலுக் குறைந்த அணு விசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வேண்டாம் ப்ளீஸ்....

Monday, July 12, 2010

வாய்யா மெர்பி



மெர்பி விதிகள் பற்றிக் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . (மெர்பி law வெல்லாம் எனக்கு பர்பி சாப்பிடற மாதிரி என்று சொல்லக் கூடாது ஆமாம்)


"எதாவது தவறாகப் போக வாய்ப்பு இருந்தால் அது கண்டிப்பாகத் தவறாகப் போகும்" என்கிறது அது.(if something can go wrong, it will...) அதாவது விஷயங்கள் இப்போது இருப்பதை விட இன்னும் மோசமாகத்தான் போகும் என்கிறது.....


இதனை பிரபஞ்ச அறிவியல் (cosmology) வெப்பவியலின் இரண்டாவது விதி " என்று கூறுகிறது. (second law of Thermodynamics)


அதாவது பிரபஞ்சத்தின் entropy என்று கூறப்படும் 'ஒழுங்கின்மை' அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறது. உதாரணமாக , கண்ணாடி டம்ப்ளர் கீழே விழுந்து உடைவது... (உடைந்த துண்டுகள் திரும்பவும் ஒன்று சேர்ந்து டம்ப்ளராக மாறாமல் இருப்பது),சட்டையின் சாயம் வெளுத்துப் போவது, நமக்கெல்லாம் வயசாகி கிழவன், கிழவி ஆவது , எல்லாம் இதில் அடங்கும். "கசங்கி இருக்கும் ஒரு சட்டை இஸ்திரி செய்த பின்னர், ஒழுங்காக இருக்கிறதே? என்று நீங்கள் கேட்டால், அந்த சட்டை அழகாக மாற நாம் கொஞ்சம் ஆற்றலை (மின்சாரம், வெப்பம்) வெளியில் இருந்து கொடுக்க வேண்டி உள்ளது... (எனவே total entropy அதிகமாகி விடுகிறது) ...அதாவது வெளியில் இருந்து எந்த விதமான உதவியும் பெறாத ஒரு மூடிய System- தில் ஒழுங்கின்மை அதிகரித்துக் கொண்டே போகும் என்கிறது இந்த விதி...


இந்த விதியின் அறிவியல் பூர்வமான விளக்கத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம். (ஐயோ இன்னொரு பதிவா?) இப்போது Murphy law - வின் நமது தினப்படி அனுபவங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.



> சினிமா தியேட்டரில் மறைக்கிறது என்று சீட் மாறி உட்கார்ந்தால் முன்னை விட உயரமானவர் வந்து உட்கார்ந்து மறைப்பார்.


> உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டு ஒரு ATM- கு சென்றால் "Sorry temporarily out of service! என்றோ "Unable to dispense cash" என்றோ வரும்.


> ஒரு முக்கியமான ஈமெயில் அனுப்பும் போது உங்கள் கம்ப்யூட்டர் hang ஆகி விடும்...


> நீங்கள் குடை எடுத்துச் சென்றால் 90% மழை வராது. எடுத்துச் செல்லாத போது 90% மழை வரும்...


>காண்டீனில் queue நகரும் போது உங்கள் முறை வந்ததும் மசாலா தோசா தீர்ந்து விடும்...


> லிப்ட் நீங்கள் கீழே இருக்கும் போது மிக உயரமான floor- இலும் மேலே இருக்கும் போது ground floor - இலும் இருக்கும்


>டிக்கெட் புக் செய்யும் போதோவங்கியில் வரிசையில் நகரும் போதோ உங்களுக்கு முன்னால் உள்ள நபர் மிக அதிக நேரம்
எடுத்துக் கொள்வார்.


>நீங்கள் லேட்டாக வந்தால் உங்கள் பஸ் சரியான நேரத்துக்கு கிளம்பி விடும். நீங்கள் அரை மணி முன்னதாகவே வந்தால்
பஸ் மிகக் தாமதமாகக் கிளம்பும்.


> டைம் ஆகி விட்டதே என்று அவசரப் பட்டு , ஆட்டோ அதிக வாடகையானாலும் ஏறி, வேர்க்க விறு விறுக்க வந்து சேர்ந்தால் இன்னும் function தொடங்கியே இருக்காது.


>பஸ்ஸில் நீங்கள் இறங்கப் போடும் ஸ்டாப் பிற்கு முந்தைய ஸ்டாப்பில் சீட் கிடைக்கும்.


>ஒரு வாகனம் நீங்கள் ரோட்டைக் கடந்து விடலாம் என்ற முடிவுடன் இறங்கி நடக்கையில் வேகமாகவும் , போன பின் கடக்கலாம் என்று நிற்கையில் மெதுவாகவும் செல்லும்.


> நீங்கள் மெனக்கெட்டு தயாரித்த குறிப்புகளை பேச்சுப் போட்டியில் உங்களுக்கு முன்னால் பேசுபவர் கூறி விடுவார்.


>நீங்கள் அவசரமாக அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்.


>உங்களுக்குத் தேவை இல்லாத போது இரண்டு மூன்று ஆட்டோக்கள் நெருங்கி வந்து "ஆட்டோ வேணுமா" என்பார்கள்.தேவைப்படும் போது அரை மணி ஆனாலும் ஒரு ஆட்டோ கண்ணில் விழாது.


> டி.வி யில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியைப் பார்க்க ஒரு வாரமாகக் காத்திருந்தால் அந்த நாள் வரும் போது பவர் போய் விடும். இல்லை கேபிளில் கரண்ட் இருக்காது.


>நீங்கள் தனியாகப் பாடும் போது , விரிபோனி வர்ணம் எல்லாம் ஜோராக வரும்.. ஆனால் யார் முன்னாலாவது பாடும் போது மோகனம் கூட வராமல் அபஸ்வரமாகப் போகும்.


> நீங்கள் மிக சீக்கிரமாக ஒரு பஸ் டிக்கெட்டோ Train டிக்கெட்டோ புக் செய்தால் 95% அதை கான்செல் செய்ய வேண்டி வரும்.


இன்றைக்கு இது போதும்


~சமுத்ரா




Saturday, July 10, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்- II


நீங்கள் உலகம் " பஞ்ச பூதங்களால் " ஆனது என்ற கருத்தைப் பெரும் பாலும் படித்திருப்பீர்கள். ஆனால் அறிவியல்இதனை ஏற்காமல் பூதம் பிசாசு எல்லாம் இல்லை, பார்த்து விடலாம் என்று அதிகப்ரசிங்கித் தனமாக பூதக்(?) கண்ணாடி வைத்துக் கொண்டு பொருட்களின் உள்ளேஎன்ன இருக்கிறது? என்று ஆராயத் தொடங்கியது. அப்படிப் பார்த்த போது, உள்ளே 'அணு' என்ற சமாச்சாரம் இருப்பதைக் கண்டது.
(இதை நாங்கள் வேத காலத்திலேயே சொல்லி இருக்கிறோம் என்று அடம் பிடிக்கக்
கூடாது )....அணு என்ற செங்கல்லால் தான் இந்த அண்டம் கட்டப்பட்டுள்ளது என்று ஒருதற்காலிக முடிவுக்கு வந்தது.

சில அதிருப்தி-வாதிகள் அணுவுக்குள்ளும் புகுந்து பார்த்து விடலாமே? என்ற கொலை வெறியுடன் உள்ளே சென்று நோக்கியதில் அணுக்கரு ஒன்றுஇருப்பதையும் அதில் 'ப்ரோடான்' மற்றும் 'ந்யூட்ரான்' என்ற சமாச்சாரங்கள்இருப்பதையும் கண்டனர். அது
மட்டும் இல்லாமல் அணுவின் பெரும் பகுதி வெற்றிடமாக இருப்பதையும்அணுவின் வெளி ஆரங்களில் 'எலக்ட்ரான்கள்' சுற்றி வருவதையும் ( பகவானை வலம் வரும் பக்தன் போல) கண்டு தெளிந்தனர். உள்ளே வாழும் இந்த 'ப்ரோடான்' கள் நேர் மின் விசை கொண்டவை. (உங்கள்வீட்டில் ஒரே சமயத்தில் பத்து பதினைந்து பெண்கள் இருந்தால்? (ஐயோ!ஒண்ணையே சமாளிக்க முடியலையே என்று யாரோ புலம்புவது காதில்விழுகிறது) சண்டைக்கு குறைவே இருக்காது இல்லையா? அதே போல இந்த 'ப்ரோடான்' கள் ஒன்றை ஒன்று விட்டு விலகிஓட முயற்சி செய்யும். அனால் அணுக் கருவுக்குள் செயல்படும் 'வலுவான அணுவிசை' (strong nuclear force) (விசை நம்பர் -1) அவற்றை நன்றாக FEVICON போட்டு ஒட்டி வைத்து
உள்ளது. இந்த விசையின் வரம்பு (range) மிகக் குறைவு என்றாலும் இதன் வலிமை
மிகப் பெரியது. (அதனால் தான் இந்த விசை நான்கு விசைகளில் முதலாவதாகவருகிறது)

இந்த விசை எவ்வளவு வலிமையானது என்றால் ஒன்றோடு ஒன்று ஒட்டி வாழும் ப்ரோடான் களை வலுக் கட்டாயமாகப் பிரிக்கும் போது பிரம்மாண்டமான விசை வெளிப்பட்டு ஒரு நகரத்தையே அழிக்கும் அளவு உருவெடுத்து விடுகிறது. (அணு குண்டு)
இந்த விசை மட்டும் இல்லை என்றால் (அல்லது கொஞ்சம் குறைவாகவோ அதிகமாகவோ இருந்திருந்தால்) நீங்களும் நானும் வந்திருக்க மாட்டோம்.

இந்த விசையில்லாமல் மேலும் இரண்டு விசைகளும் அணுக்கருவுக்குள் செயல் படுகின்றன. அவை:

> ப்ரோடான் -ப்ரோடான் ஈர்ப்பு விசை (விசை நம்பர் -4)
> ப்ரோடான் - ப்ரோடான் மின் காந்த விலக்கு விசை (

விசை நம்பர் -2 )

ஆனால் நம் தாதா வலிய விசையின் முன்பு இந்த இரண்டும் Client -இடம் கை கட்டி நிற்கும் project manager போல வாலைச் சுருட்டிக்
கொண்டு இருக்க வேண்டியது தான்..... :)

'வலுக் குறைந்த அணுவிசை' (weak nuclear force) (
விசை நம்பர் -3) பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். too tired now...ஒரு சனிக்கிழமை அன்று (மணி 7. 00 pm)இந்த மாதிரி
விசயங்களை ஆபீஸ்- இல் உட்கார்ந்து கொண்டு எழுதுவது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும் please....


Wednesday, July 7, 2010

இரண்டு விஷயங்கள்...

சமீபத்தில் கர்நாடகா அரசின் KSTDC package tour ஒன்றிற்குச் சென்றிருந்தேன். ( மடிகேரி மற்றும் நாகர ஹோளே) .[ யாருடன் என்பது beyond the scope of this document :D)
உங்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கே கிளிக் செய்க.
அப்போது நான் சந்தித்த மனதை நெருடிய இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதலாம் என்று எழுதுகிறேன்.

வி1: பஸ் புறப்பட்டதும் tour guide (ரொம்ப பக்திமான் போலும்) 'வாதாபி கணபதிம்' மங்கள கரமாக play செய்தார். (மாண்டலின் ஸ்ரீநிவாஸ் ) .பிறகு நளின காந்தியில் ' மன வ்யாலகிம்' தொடங்கியது. ரொம்ப நாளாக நான் நளின காந்தி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். (ஆபீசில் எல்லா music site- களும் block :( ) அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் (வட நாட்டில் இருந்து வந்த மாடர்ன் இளைஞர் போலும்)
எழுந்து வந்து டிரைவர் -இடம் அந்த music- ஐ தயவு செய்து நிறுத்துமாறு கூறி தன் கலைச் சேவையை ஆற்றினார். (இத்தனைக்கும் அவர் தன் காதில் I-pod அணிந்து இருந்தார்) ...கர்ணன் குண்டலத்துடன் பிறந்தது போல இவர் காதில் I-pod உடன் பிறந்திருப்பார்
போலும்....
மன வ்யாலகிம் நிறுத்தப்பட்டு FM -இல் ஒரு ஹிந்தி பாட்டு கத்த ஆரம்பித்தது.
ஏன் கர்நாடக சங்கீதத்தின் மீது இவ்வளவு Intolrence? நம் மண்ணில் பிறந்த ஓர் அபூர்வமான இசையின் மீது நம் இளைஞர்களுக்கே
ஏன் இத்தனை வெறுப்பு வந்தது? of course, முதன் முதலாகக் கேட்கும் போது அது ஒரே இரைச்சலாகத் தான் இருக்கும்.
எனக்குத் தெரிந்த சிலர் TV. யில் சேனல் மாற்றும் போது இடையே கர்நாடக சங்கீதம் வந்தால் என்னவோ அஜாமேளன் நாராயண நாமம் கேட்டு விட்ட ரேஞ்சுக்கு அதிர்ந்து ஒரு மில்லி செகண்டில் சேனலை மாற்றி நிம்மதிப் பெரு மூச்சு விடுவதைப் பார்த்திருக்கிறேன்.
ஏன் கர்நாடக இசை , சமூகத்தில் வெகு சிலரையே கவர்ந்து வந்துள்ளது? இதைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் சீக்கிரம் எழுதலாம் என்று உள்ளேன்.

வி2: அந்த tour -இன் போது Abbay Falls என்ற ஒரு நீர் வீழ்ச்சிக்குக் கூட்டிச் சென்றார்கள். Falls சிறியது தான் என்றாலும் மிக ரம்மியமாக இருந்தது. வழக்கம் போல் சிலர் அருவியை ரசிக்காமல் தங்களுடைய கேமரா க்களில் முழுகி விட்டிருந்தனர்.
அப்போது பக்கத்தில் யாரோ இருவர், (NRI போலும்) பேசுவது காதில் விழுந்தது. " this is not even 1% compared to Niagra Falls, no?"
என்று. ..
இவர்களெல்லாம் எதற்காக செலவு செய்து இவ்வளவு தூரம் வர வேண்டும்? Niagra விலேயே நீச்சல் அடித்துக் கொண்டு
அமெரிக்கா போல உண்டா? கனடா போல உண்டா? என்று பாடிக் கொண்டு இருக்க வேண்டியது தானே?
of course, நயாகராவில் "Maid of the mist' என்று சொல்லப்படும் படகு சவாரி ஒரு அற்புதமான அனுபவம் என்றாலும் Niagra is Niagra, and Abbay Falls is Abbay Falls!" இல்லையா? ஒவ்வொன்றிக்கும் அதற்கே உண்டான அழகு உள்ளதல்லவா?
கடந்த காலத்தை விட்டு வர இயலாத, அழகை ரசிக்கத் தெரியாத இவர்களெல்லாம் ஏன் சுற்றுலா வர வேண்டும் என்று தெரிய வில்லை...

-சமுத்ரா






Tuesday, July 6, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்- I


பெண்ணே!

பிரபஞ்சத்தில் மொத்தம்

நான்கு விசைகள் தான் உண்டென

அறிவியல் கூறும்! -

உன்

கண்ணின்

கவர்ச்சி விசை

எந்த விசையில் சேரும்?

- இப்படியெல்லாம் அபத்தமாக கவிதை எழுதாமல் , (நான் தான் எழுதினேன்) பிரபஞ்சத்தின் ஆதார விசைகளை பற்றி கொஞ்சம் (அறிவியல் பூர்வமாக) பாப்போம்....


உங்களுக்கு உடனடியாக ஒரு நோபெல் பரிசு வேண்டும் என்றால், கீழே உள்ள எதாவது ஒன்றின் முடிச்சை அவிழ்க்கவும்.


> கரும் சக்தி அல்லது கரும் துளை

> எல்லாவற்றிற்குமான கொள்கை (Theory of everything) !

> பிரபஞ்சத்தின் நான்கு முக்கிய விசைகளுக்கு இடையே உள்ள தொடர்பு


இதில் கரும் துளை என்பது ஒரு மர்மமான பிரதேசம். இதைப்பற்றி ஆராய நீங்கள் ஒளியை அனுப்பினால் அந்த ஒளியையும்

இது விழுங்கி விடுகிறது.

ராம கிருஷ்ணர் கூறிய ஒரு கதை நினைவில் வருகிறது. "ஓர் உப்பு பொம்மை சமுத்திரத்தின் ஆழத்தை

அறிந்து வந்து எல்லாருக்கும் சொல்லலாம் என்று கிளம்பி கடலுக்கு உள்ளே சென்றதாம். ஆனால் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே கடலிலே கரைந்து கடலோடு கடலாக ஒன்றி விட்டதாம். அதே மாதிரி , ஒரு சாதகன் நான் கடவுளை அறிந்து வந்து எல்லோருக்கும் சொல்வேன் என்று உள்ளே (தனக்கு உள்ளே) கிளம்பினால் அந்தத் தேடுதலில் அவன் தன்னையே இழந்து விடுகிறான் "என்னும் கதை.


அதே போல் ஒரு ஒளிக் கற்றையை பார்த்து " நீ என் கண்ணு இல்ல? சமர்த்தா போயி உள்ள என்ன இருக்குனு பாத்துட்டு வந்து சொல்லு" என்று கூறி அனுப்பினால் அது திரும்பி வந்தால் தானே? அந்த படு பாவி கரும் துளை தன்னை வேவு பார்க்க வந்த ஒற்றனை

(கொஞ்சம் கூட ராஜ தர்மம் இல்லாமல்) விழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறது. செய்தி கேட்க வந்த புறாவை அந்த கரும் துளை ராஜா

புறாக்கறி ஆக்கி விழுங்கி விடுகிறான். :( :(


அதனால் இந்த கரும் துளை மற்றும் கரும் சக்தி ஆகிய வற்றை மறைமுகமாகத்தான் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது.


Hubble என்று ஒரு அறிவியல் ஆசாமி பிரபஞ்சம் விரிகிறது என்று ஒரு உண்மையைக் (?) கூறி குட்டையை நன்றாக குழப்பி விட்டு விட்டு சென்றார். ஹப்பிள் விதியை எளிமையாகச் சொன்னால், "ஒரு விண்மீன் நமக்கு எவ்வளவு தொலைவில் உள்ளதோ அது நம்மை விட்டு அவ்வளவு வேகமாக விலகி ஓடுகிறது. " (அய்யா சாமி, மனுசப் பயலே, ஆள விடு , நான் ஓடிடுறேன் , ஆராய்ச்சி பண்ண கிண்ண வந்துராதே, என்று நினைத்தோ என்னமோ?) . எது எது எது ( சாரி கொஞ்சம் உணர்ச்சி வசம் ஆயிட்டேன்) அதை அவ்வாறு ஓடவைக்கிறது? பிரபஞ்சத்தில் வியாபித்துப் பரவி இருக்கும் "கரும்" சக்தி என்கிறார்கள்.


உதாரணமாக , ஒரு பலூனை எடுத்துக் கொள்வோம். முதலில் ஒரு பெட்டிக் கடைக்குச் சென்று ஒரு பலூன் வாங்கவும்.

கடைக் காரரிடம் எதற்கும் ' நான்கு பரிமாண' பலூன் உள்ளதா ? என்று கேட்டுப் பார்க்கவும். அண்ணாச்சி அடிக்க வருவதற்கு முன்

கிடைத்த பலூனுடன் எஸ்கேப் ஆகி விடவும்.


இப்போது பலூனை மெதுவாக ஊதவும். (காரைக்குறிச்சி நாதஸ்வரத்தில் தோடி வாசிப்பது போல உற்சாகமாக ஊத வேண்டாம்.நம்மிடம் ஒரே ஒரு திருட்டு பலூன் தான் உள்ளது)

பலூன் பெரிதாக பெரிதாக , அதன் புள்ளிகள் , ஒன்றை விட்டு ஒன்று விலகி ஓடுவதைக் காணலாம். அது போல தான் நம்

நட்சத்திரக் கூட்டங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகி ஓடிக் கொண்டு உள்ளன)


பலூனை ஊத ஊத அதன் உள்ளே செல்லும் காற்று அதைப் பெரிதாக ஆக்க முயற்சி செய்கிறது. அதே சமயம், அதன் சவ்வின் இறுக்கம் (tension) அதை வெடிக்க விட்டு சிறிதாக ஆக்க முயற்சி செய்கிறது. எது வலுவானதோ அது வெற்றி பெறும். அதாவது காற்றின் விசை பலமானது என்றால், பலூன் பெரிதாகிக் கொண்டே போகும் (முடிவே இல்லாமல்) இறுக்கம் அதிகமானால் , பலூன் வெடித்து சிதறி விடும்.


அதே மாதிரி தான் , நம் பிரபஞ்சத்தில் இப்போது ஈர்ப்பு விசைக்கும் கரும் சக்திக்கும் 'நீயா? நானா? என்ற ரன்னிங் race

நடந்து கொண்டு உள்ளது. நம் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களின் மொத்த ஈர்ப்பு விசை (இறுக்கம்), அதைக் குறுக்கி அடக்கி, சிறிதாக்க

முயற்சி செய்து கொண்டு உள்ளது. ஆனால் கரும் சக்தியோ , (காற்று) அதற்கு எதிராக செயல் பட்டு , பிரபஞ்சத்தை விரிந்து ஓடச் செய்கிறது.

இரண்டில் எது வெற்றி பெறும் என்பதை, அறிவியல் வல்லுனர்களாலும் இப்போது கூற முடியவில்லை.


பிரபஞ்சம் விரிவதை இன்னொரு உதாரணம் மூலமாகப் பார்க்கலாம்.


ட்ரெயின் அல்லது பஸ்ஸில் செல்லும் போது ஜன்னல் வழியே கவனிக்கவும் ( figure- ரை அல்ல) அருகில் உள்ள கட்டிடங்கள் , மரங்கள் உங்களை விட்டு வேகமாக விலகி ஓடுகின்றன. அனால், தூரமாக உள்ள மரங்கள், கட்டிடங்கள், மெதுவாக உங்களை

விட்டுச் சென்று கொண்டு உள்ளது. இதற்கு நேர் எதிரான நிலை தான் நம் பிரபஞ்சத்தில் நிகழ்கிறது. அதாவது, தூர விண்மீன்

தூரம் தூரம் தூரமாக விலகி எட்டாக் கனியாக ஓடி விடுகிறது.....


Theory of everything

பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம். பிரபஞ்சத்தின் விசைகள் பற்றி விரிவாக பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்- II

இல் பார்க்கலாம்.



~சமுத்ரா







Thursday, July 1, 2010

Awareness video

:D

இன்னும் மூன்று ஹைக்கூ -க்கள்

* உலகில்
ஒரு கோடி உயிரினம்
உண்டென்று எங்கேயோ படித்தேன்...
ஆனால்
எங்கு பார்தாலும்
மனிதன் ......

* கல்யாணிக்கு
ஒரு
புடவை
ரஞ்சனிக்கு
காலேஜ் ஃபீஸ்
தாத்தா வாசித்த வீணையை விற்று....

* பஸ் ஸ்டாண்டில்
கையேந்தும்
கூன் முதுகுக் கிழவியின்
பெயர்
என்னவாக இருக்கும் ??

இவாள்லாம் திருந்தவே மாட்டாளா?-1

* பஸ்சிற்காக காத்திருக்கும் போது எடுத்து வைத்துக் கொள்ளாமல் (சில்லறை)
பஸ்ஸில் ஏறி முழி பிதுங்கும் கூட்டத்தில் தனது எல்லா பாக்கெட் களையும்
அகழ்வாராய்ச்சி செய்பவர்கள்....

* train டிக்கெட் -க்கான க்யூவில் , டிக்கெட் வாங்காமல் counter-இல் உள்ளவரிடம் ,'கோயம்புத்தூர் வண்டி
போயிடுச்சா ? ' 'ஈரோடு வண்டி எத்தனை மணிக்கு ?' ' சேலம் வண்டி எங்க நிக்கும்?'என்று interview செய்பவர்கள்...

* ATM இல் பின்னே நீண்ட க்யூ இருக்கும் போது நிதானமாக அதன் பட்டன்-களை
அழுத்தி, balance எவ்வளவு? மினி statement என்று Software TEsting ரேஞ்சுக்கு
நோண்டிக் கொண்டு இருப்பவர்கள்.

* Bank இல் படு பிசியாக application நிரப்பிக்கொண்டு இருப்பவரிடம் மெதுவாக நெருங்கி , அசடு வழிந்து,
ஜாடை செய்து பேனா கேட்பவர்கள்....


* Hotel லில் menu card ஐ exam ரிசல்ட் பேப்பர் ரேஞ்சுக்கு பார்த்து முடித்து விட்டு , தேமே என்று நின்று கொண்டு
இருக்கும் சர்வரிடம் நிமிர்ந்து 'ரெண்டு காபி' என்பவர்கள்....


* மொபைல் போனில் அடுத்த முனையில் இருப்பவருக்கு அப்படியே கேட்கிற மாதிரி சத்தமாக இரைபவர்கள்.

* இயர் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே பதில் சொல்லும் போது கத்துபவர்கள்

* ஆறாம் வகுப்பு பெயில் ஆகி விட்டு ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் டிரைவர்-இடம்
"How long it takes to go there"? " Can you go little fast" என்று (தமிழ் தெரிந்து இருந்தாலும்) Foreigner ரேஞ்சுக்கு பீலா
விடுபவர்கள்.

* ஒரு மணி நேரம் நிற்கப் போகும் ரயிலில் , அது வந்து நின்றவுடன் , (reserve செய்து இருந்தாலும்) அடித்துப் பிடித்துக்
கொண்டு எல்லோரையும் தள்ளி விட்டு விட்டு அரக்கப் பரக்க ஏறுபவர்கள்.......

* எதிர் சீட்டில் அமர்ந்து இருக்கும் பயணியிடம் மரியாதைக்காக கூட ஒரு வார்த்தை கேட்காமல் , பிஸ்கட் , பழம், முறுக்கு, வடை, தோசை, கடலை, பொரி, கட்லெட், என்று எல்லாவற்றையும் மாயா பஜார் கடோத்கஜன் ரேஞ்சுக்கு கபளீகரம் செய்பவர்கள்.....

* ஒலியின் அதிக பட்ச அதிர்வெண்ணில் ஒரு படத்தை போட்டு விட்டு விட்டு, Formula-1 பந்தயம் ரேஞ்சுக்கு
பஸ்சை ஒட்டி பயணிகளுக்கு எம பயம் உண்டாக்குபவர்கள்.....

* சுற்றுலா வில் ஒரு பிரபலமான இடத்தின் அருகே நின்று கொண்டு, 'எந்திரன்' பட சூட்டிங் ரேஞ்சுக்கு வித விதமாக 'Pose' களில் நிற்க வைத்து நின்றும் அமர்ந்தும் சயநித்தும் போட்டோ எடுப்பவர்கள். (அந்த இடத்தை ரசிப்பதை விட்டு விட்டு)

* அவசரமாக ஒரு அழைப்பை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் போது, மொபைலில் கால் செய்து , "ஹலோ, we are calling from
HDFC bank......" என்று கடுப்பை கிளப்புபவர்கள்....

தொடரும்...............:D