இந்த வலையில் தேடவும்

Thursday, September 30, 2010

Blog- உலகில் வெற்றி பெற 20 மகத்தான வழிகள் !




* கூடுமானவரை செந்தமிழில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்

* கீழ்க்கண்ட சமாச்சாரங்கள் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கக் கூடாது

அறிவியல்

இலக்கியம்

இசை

* உங்கள் பதிவுகளில் 90 % க்கு மேல் மொக்கையாக இருக்க வேண்டும்... (மொக்கை என்றால் என்ன என்று யாராவது தெளிவாகச் சொல்லுங்களேன்?)

* அரசியலும், சினிமாவும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்

* சினிமாவில் கஷ்டப்பட்டு நடிப்பவர்களை 'அது சரியில்லை' 'இப்படி நடித்திருக்கக் கூடாது" "பூட்ட கேஸ்" என்றெல்லாம் பாரதிராஜாவிடம் பத்து வருஷம் assistant - ஆக இருந்த லெவலுக்கு அலட்டிக் கொள்ளத் தெரிய வேண்டும்

* ஏற்கனவே டி.வி. நியூஸ் பேப்பர், இன்டர்நெட் என்பதிலெல்லாம் வந்து புளித்துப் போன சமாசாரங்களை (உ.தா:எந்திரன், அயோத்தி) மறுபடியும் எழுதி புளித்த மாவில் இட்லி சுடுவது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும்...

* கண்ணில் பட்ட blog -குகளுக்கு எல்லாம் சென்று ஆஹா ஒஹோ அருமை சான்ஸே இல்லை என்றெல்லாம் பின்னூட்டம் இட வேண்டும் (குறிப்பு: பதிவைப் படிக்கத் தேவையில்லை)

* கிளிக் செய்யும் blog -குகளில் எல்லாம் follower - ஆக சேர்ந்து விட வேண்டும்....

* இருக்கிற gadget - களை எல்லாம் உங்கள் ப்ளாகில் போட்டு கிட்டத்தட்ட அது ஒரு குப்பைத் தொட்டி போல் காட்சி தர வேண்டும்

* கவிதைகளை எழுதுவது நல்லது...ஆனால் ஒரு விஷயம் அது யாருக்கும் புரிந்து விடக் கூடாது

* உங்கள் பதிவின் இறுதியில் நீங்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று யாருக்கும் தெரியாத படி எழுத வேண்டும்

* புறநானூறு, திருப்பாவை, சங்க இலக்கியம், செம்மங்குடி, இப்படியெல்லாம் ஏதாவது எழுதுவதாக இருந்தால் தயவு செய்து பதிவை DELETE செய்து விடவும்...உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு காப்பி எடுத்துக் கொண்டு நீங்கள் மட்டும் படித்துக் கொள்ளவும்..

* காதல் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்... பிகர், செட்-அப் ,நூல் விடுவது,பிட்டுப் போடுவது என்றெல்லாம் யூத் பாஷையில் எழுத வேண்டும்..

* நீங்கள் யூத்தாக இல்லை என்றால் (எத்தனை வயது வரை யூத்? முப்பதா?) ப்ளாக் எழுதுவதை விட்டு விட்டு சங்கரா டிவி பார்க்கவும்

* உங்கள் ப்ளாக்-இல் நீங்கள் கூலிங் கிளாஸ் அணிந்து மேலே பார்க்கும் படி ஒரு போட்டோ இருப்பது நல்லது... (அறிவு இருக்குன்னு தெரியணும் இல்ல?)

* கடி ஜோக்குகளை எழுதி உங்கள் ரத்த வெறியை நிரூபிக்க வேண்டும்..(உ.தா:(1 )உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி
பெயில் ஆகும்.(2)சார், டீ மாஸ்டர் டீ போடறாரு,பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…)

* visitor 's count கண்டிப்பாக இடம் பெற வேண்டும்....இத்தன பேர் எட்டிப் பாத்தாய்களா? நாம நல்லாத் தான் எழுதறமோ? என்று நமக்கே சந்தேகம் வர வேண்டும்

* ஏதாவது நல்ல (?) ப்ளாக் கண்ணில் பட்டால் உடனே ஏதோ பஞ்ச மகா பாதகத்தில் ஒன்றை செய்து விட்டது போல் அலறி BACK பட்டனை அழுத்தி விட வேண்டும்...

* படங்களை நெட்டில் இருந்து சுடுவது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். சொந்த சரக்கு வலை உலகில் விலை போகாது....

* ஹைக்கூ எழுதத் தெரிந்திருக்க வேண்டும்....மூன்று வரிகளில் எதை எழுதினாலும் ஹைக்கூ தான் என்று கண்டிப்பாக நம்ப வேண்டும்....


~சமுத்ரா

Wednesday, September 29, 2010

நண்பா உன்னை மன்னிக்க மாட்டேன்!

ஆபீசில் ஒரு கவிதைப் போட்டி வைத்தார்கள்....கவிதை நட்பைப் பற்றி எழுத வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள்...முதல் பரிசு ஒரு லேப்-டாப்பாம்....ஆசை யாரை விட்டது? ....எழுதி அனுப்பினேன்...வழக்கம் போல் நமக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை....சரி இந்த blog -எல்லாம் எதற்காக இருக்கிறது? இதில் தள்ளி விடலாம் என்று இங்கே அந்தக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பை எழுதுகிறேன்.....



உன் நட்பால் நான் நாளும் மகிழ்ந்தேன்
வாழ்வின் வரம் என்று வலிகள் மறந்தேன்!
இன்று தான் ஓர் உண்மை தெரிந்தது
நீ முகங்கள் பலவற்றைக் கொண்டவன் என்பது....


அன்று பள்ளியில் என் உணவு கெட்டது
பசியோ என் வயிற்றைச் சுட்டது
நீ உன் உணவை எனக்குத் தந்தாய்
நீ எனக்கன்று தாயாகத் தெரிந்தாய்....


பள்ளியில் அன்று சுற்றுலா நேரம்
பணம் இன்றி நானோ பின்னால் நின்றேன்
பரிவினால் நீ அதை செலுத்திய போது
பார்த்தேன் உன்னை, ஒரு தந்தையாய்த் தெரிந்தாய்....


அந்தி மாலை மழை வரும் நேரம்
அருகினில் இருவரும் நடந்து கொண்டிருந்தோம்
சிந்திய மழையில் என்னைக் குடைக்குள் இழுத்தாய்
சிறிதுன்னைப் பார்த்தேன் என் அண்ணன் போல் தெரிந்தாய்...


நோயினால் நானன்று நலிந்து போய் இருந்தேன்
நலமின்றி பள்ளியின் வகுப்புகள் துறந்தேன்
தேடி நீ வந்தன்று பாடம் புகட்டினாய்
திரும்பிய போதொரு ஆசான் போல் தெரிந்தாய்...


காலம் நகர்ந்து நான் ஊர் விட்டுப் போனேன் -உன்
கண்களில் அன்றொரு காதலி கண்டேன்
காலம் கடந்து நான் திரும்பிய நாளில் - உன்
களிப்பினில் அன்றொரு குழந்தையைக் கண்டேன்...


வெளி நாடு போய் நான் வாழ்வேன் என்று
விளையாட்டைத் தான் நான் உன்னிடம் சொன்னேன்
வருந்தி நீ என்னைக் கன்னத்தில் அடித்தாய்
தெரிந்தாய் அன்றொரு எதிரியாய் எனக்கு!


பொய் தான் சொன்னேன் என்று நான் சொல்ல
புன்னகை
யோடென்னை வந்து நீ அணைத்தாய்
மெய்யாய் அன்று உன் முகத்தில் நானோ
மேன்மை தங்கிய கடவுளைப் பார்த்தேன்


நண்பனே!
ஏன் உந்தன் முகங்களை இப்படி மாற்றினாய்
நிலையாக இல்லாமல் என்னை ஏமாற்றினாய்
மன்னிப்பதில்லை இதை, இதோ தண்டனைச் செய்தி!
நீ என் இதயச் சிறையில் இனி ஆயுள் கைதி!


~ சமுத்ரா

(இதன் ஒரிஜின
ல் ஆங்கில வடிவம் நீங்கள் கேட்டுக் கொண்டால் கொடுக்கிறேன்)

பொம்மைக் கொலு fever -2

டுத்ததாக பட்சணங்கள்....நவ ராத்திரி தொடங்கியதும் எங்கிருந்தோ சிறுவர்கள் கும்மாளம் மூக்கில் வியர்த்த மாதிரி ஒன்பது நாளும் சாயங்காலம் படையெடுத்து 'பொம்மை கோல் பட்சணம்' என்று வீட்டுவாசலில் கத்த ஆரம்பிக்கும்.... கூட்டம் அதிகம் இருந்தால் "இன்னிக்கு முதல் நா தானே? நாளேலேர்ந்து வாங்கோ" என்றோ "இன்னைக்கு கடைசி நாள் பட்சணம் கிடையாது " என்றோ சொல்லி சமாளிக்க வேண்டும்...கூட்டத்தில் யாருக்கு கொடுத்தோம் யாருக்கு கொடுக்கவில்லை என்பதே தெரியாது "மாமி இவன் அப்பவே வந்து வாங்கிட்டுப் போனான்" ,"மாமி இது தான் முதல் தரம்" என்ற குரல்களெல்லாம் கேட்கும்....


அப்போது அக்ரஹாரத்தில் பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் கொலு வைப்பார்கள்.....சாயங்காலம் 6 மணிக்கு பட்சனத்திற்க்குக் கிளம்பினால் எல்லார் வீட்டுக்கும்போய் திரும்பி வர 8 மணி ஆகும்...வீட்டுக்கு வந்ததும் கொண்டு சென்ற கவர் பல வித
பட்சணங்களால் நிரம்பி Encyclopedia போல் இருக்கும்...கலர் கலரான சுண்டல்கள், பொட்டுக் கடலை பொடி, ஆப்பம், பிஸ்கட், என்று

கீழ்க்கண்ட சம்பாஷணைகள் நடக்கும்:

இது யார் வீடு பொட்டலம் டா?
ரங்க விட்டல் மாமாது பாட்டி...
நெனச்சேன்....கஞ்சப் பிசினாறிகள்....பாரு பொட்டுக் கடலை பொடி விபூதி மாரி கொடுத்திருக்கா....

அடுத்து வீட்டுக்கு வரும் மாமிகள்....சிலர் 'பாட்டு' எங்கு தொலைதூரத்தில் எங்கோ கேட்டால் கூட போது
ம்....அது தான் சாக்கு என்று வாய் திறந்து சங்கீத அருவியைக் கொட்ட விட்டு விடுவார்கள்....அம்புஜம் மாமி என்று ஒருவர் வருவார்....எப்போது வந்தாலும் கீச்சுக் குரலில் ஹய் பிச்சில் "ப்ரோசேவா ரெவருரா" என்று ஆரம்பித்து விடுவார்.... (ஸ்வரம் வேறு நடுவில் பாடுவார்) பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நாங்கள் சிரிப்பு வெளியே வந்து விடாமலிருக்கதெரிந்த தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருப்போம்.....

வெவ்வேறு வீடுகளில் வெவ்வேறு விதமான கொலுவைப் பார்க்க முடியும்... கோடியில் உள்ள ஒரு மாமி வீட்டில் 14 படி வைப்பார்கள்...முழுதாகப் பார்த்து முடிக்க அரை மணி ஆகும்.... கல்யாண செட், ஆர்கெஸ்ட்ரா செட், கிருஷ்ணாவதார செட்,கைலாசம் செட், சீனா பொம்மைகள், தஞ்சாவூர் பொம்மைகள், தசாவதார செட், மைசூர் பொம்மைகள், என்று உலகில் உள்ள எல்லா பொம்மைகளையும் வாங்கி விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும்....

இன்னொரு மாமி வீட்டில் ஒரு டேபிளைப் போட்டு மேலே ஒரு துண்டை விரித்து நாலு பொம்மை வைத்து விட்டு 'கொலு' என்பார்கள்....அதற்கு எல்லாப் பெண்களுக்கும் அழைப்பு வேறு....

இன்னொரு மாமி பட்சணம் கவரில் போடும் போது, "பசங்களா தொட்டு கிட்டு வைக்கப் போறேள்... அப்பறம் மறுபடி குளிக்கணும் என்று கூறி பட்சணத்தை ஸ்பின் பௌலர் ரேஞ்சுக்கு அங்கிருந்து வீசுவார்....

அடுத்த சங்கடம்....ஓரளவு (?) பாட வரும் என்பதால் எல்லார் வீட்டிலும் என்னையும் அக்காவையும் பாடுங்கோ என்று கூறு விடுவார்கள்....சரி பாட்டி மானத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்பதற்காக 'தேவியைப் பூஜை செய்வாய்' யோ 'எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாய்' யோ ஒரு வழியாகப் பாடி முடிப்போம்....பாடி முடித்த அடுத்த நொடியில் 'இந்தாங்கோ பட்சணம்' என்று கொடுத்து விடுவார்கள்...(எங்கே இன்னொரு பாட்டு ஸ்டார்ட் செய்து விடுவார்களோ என்று பயந்தோ என்னவோ)




காலம் எல்லாவற்றையும் எப்படி மாற்றி விடுகிறது (நவராத்திரி உட்பட) என்று நினைத்துப் பார்க்கிறேன்...இன்று வீதியில் நிறைய பேர் காலி செய்து விட்டு சென்னைக்கோ பெங்களூருவிற்கோ சென்று விட்டனர்.... ஆபீசில் வேலை ஜாஸ்தி என்பதால் நவராத்திரிக்கு முதல் நாள் ஊருக்குப் போக முடியவில்லை....போன் செய்து "அம்மா கொலு வைத்து விட்டாயா என்று கேட்டால் இல்லைடா அதுக்கெல்லாம் எங்கே முடிகிறது கடைசி மூணு நாள் தான்" என்கிறாள்.....கடைசி மூன்று நாள் சென்று பார்த்தால் கொலு என்ற பெயரில் ஒன்று அலமாரியில் "சாஸ்திரத்துக்காக" வைக்கப்பட்டுள்ளது..... இரண்டே இரண்டு மர பொம்மைகள்.... சில எலக்ட்ரானிக் அயிட்டங்கள்....பையன்களும் ஏனோ இன்று பட்சணத்திற்குஅவ்வளவாக வருவதில்லை....

கொலுவில் இருந்து எங்களால் பிரித்துப் பார்க்கவே முடியாத பாட்டி இன்று கண் தெரியாமல் படுக்கையில் தன் கடைசி
த் தருணங்களில் இருக்கிறாள்......வண்ணம் இழந்த உடைகளில் அந்த இரண்டு மர பொம்மைகளும் அவள் மீண்டும் எழுந்து வந்து கல்யாணியில் கம்பீரமாக "எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாய் மகளே" என்று பாட மாட்டாளா என்ற ஏக்கத்துடன் எங்கோவெறித்துப் பார்த்த வண்ணம் உள்ளன.....


Tuesday, September 28, 2010

பொம்மை கொலு Fever -1

அப்போதெல்லாம் நவராத்திரி வருவதற்கு முன் ஒரு வாரத்திற்கு முன்னரேயே 'கொலு fever ' பிடித்துக் கொண்டு விடும்....முதலில் 'கொலு பொம்மைப்' பெட்டியை மேலிருந்து கீழே இறக்க வேண்டும்...அந்தப் பெட்டியானது கிட்டத் தட்ட ஒரு மினி zoo போல கரப்பான் பூச்சி, எலி போன்ற சகல உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும்.... பொம்மையின்டிரஸ்ஸை எல்லாம் எலி ஸ்வாகா செய்து விட்டிருக்கும்....



பெட்டியை வெய்யிலில் வைத்து விட்டுப் பின் மர பொம்மைகளின் காகித உடைகளைக் களைந்து அவற்றை பப்பி ஷேம் ஆக்க வேண்டும்.... (மர பொம்மைகள் இல்லாமல் கொலு வைக்கக் கூடாதென்று சாஸ்திரமாம்) பின்னர் அவற்றைக் குளிப்பாட்டும் படலம் தொடங்கும்.....தண்ணீர் காய வைத்து பொம்மைகளுக்கு தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும்... தண்ணீர் காய்ந்ததும் நன்றாக சீயக்காய் போட்டு பொம்மைகளைத் தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும்...(அப்போதே எங்கள் வீதியில் ஒரு மாமி மாடர்ன் ஆக கிளினிக் பிளஸ் எல்லாம் போடுவார்..இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கூற வேண்டாம்...பொம்மைகள் கடவுள்கள் என்பதால் தான் அவைகளுக்கு இவ்வளவு மரியாதை)

பொம்மைகள் குளித்து விட்டு வந்ததும் அவைகளுக்கு உடை உடுத்தும் படலம் தொடங்கும் ....முன்னமேயே கடையில் இருந்து கலர் கலரான காகிதப் பேப்பர்கள் ,ஜிகினா பேபர்கள், வாங்கி வந்து வைத்து விடுவோம்... மைதா மாவை காய்ச்சி பசையும் ரெடியாகி விடும்....பாட்டி வேலைகளை முடித்து விட்டு மதியம் மூன்று மணி சுமாருக்கு வந்து டிரெஸ்ஸிங் செய்ய உட்கார்ந்து விடுவாள்....நாங்களும் ஸ்கூலுக்கு வயிற்று வலி என்று லீவ் சொல்லி விடுவோம்... எங்கள் வீட்டில் தான் அந்த வீதியிலேயே மர பொம்மைகள் அதிகம்....திருப்பதியில் இருந்து இறக்குமதியான கருப்பு பொம்மைகள் சுமார் இருபது இருக்கும்...ஓர் அடி நீள ஜோடியில் இருந்து விரல் அளவே உள்ள ஜோடிகள் வரை....ஆண் பொம்மைகளை விட பெண் பொம்மைக்கு டிரஸ் செய்ய தான் ரொம்ப நேரம் பிடிக்கும்....(பொம்மையிலும் அதே கேஸ் தானா??) சிறியவர்கள் எல்லாம் ஆண்களுக்கு சர்ட், பேண்ட் வெட்டிக் கொண்டிருக்க பாட்டி பெண்களுக்கு பட்டுப் புடவைகளை ரெடி செய்வாள்....நாங்கள் மர பொம்மைகளை ஒரு குடும்பமாகத் தான் கருதுவோம்....பாட்டி இந்த தரம் கிழவிப் பாட்டிக்கு ரோஸ் கலரில் திக் பச்சை பார்டர் பட்டுப் புடவை போட்டு விடு....அவள் மூத்த மருமகளுக்கு ஆரஞ்சுப் பட்டு வயலெட் பார்டர்...இளைய மருமகளுக்கு நீலக் கலர் பட்டுப் புடவை கோல்டன் பார்டர், மகளுக்கு மஞ்சள் பட்டு நீல பார்டர்,,,,, என்றெல்லாம்" போத்தீஸ் "ரேஞ்சுக்கு பேசிக் கொள்வோம் .... ஒரு தரம் ஒரு பெண் பொம்மையின் ஜோடியைக் காணவில்லை... விதவையை வைக்கக் கூடாது என்பதால் அதை அவசர அவசரமாக இரண்டாம் தாரமாகக் கட்டி கொடுத்து (?) கொலுவில் வைக்க வேண்டி இருந்தது....இன்னொரு முறை எப்படியோ இரண்டு பெண் பொம்மைகள் மிஞ்சி இருந்தன...பின்னர் வேறு வழி இல்லாமல் ஒரு பெண்ணுக்கு ஆண் வேஷம் போட்டு மேடை ஏற்ற வேண்டி இருந்தது....அந்தக் காலத்திலேயே இந்த மாதிரி சீர்திருத்தத் திருமணங்களை பாட்டி செய்து விட்டாள் பாருங்கள்...



கலர் பேப்பரை அளவாக வெட்டி அதன் நுனியில் பார்டர் பேப்பரை ஒட்டி விட வேண்டியது.....பிறகு அதில் புள்ளிகளை சின்ன சின்னதாக வெட்டி ஒட்டி விட்டு விசிறி போல் மடித்து பொம்மையி
ன் இடுப்பில் நாடா போட்டு கட்டி விட வேண்டியது.... இன்னொரு பேப்பரை இதே போல் செய்து மார்புக்குக் குறுக்காக வைத்து ஒட்டி மாராப்பு செய்ய வேண்டியது ...பிறகு பார்டர் வைத்த ரவிக்கை....ஆண் பொம்மைகளுக்கு என்று வரும் போது டைலர் வேலை செய்து செய்து களைத்துப் போயிருக்கும்....எனவே ஏனோ தானோ என்று எல்லாருக்கும் ஒரே மாதிரி பைஜாமா ஜிப்பா போட்டு விட்டு விட வேண்டியது... இது அநியாயம்,ஆண் துரோகம் என்று பெரியப்பா சத்தம் போடுவார்....

ஆடை இருந்து அலங்காரம் இல்லை என்றால் எப்படி? வீட்டில் உள்ள பெண்களின் பழைய கவரிங் நகைகளை துண்டுகளாக வெட்டி கழுத்திலும் கைகளிலும் ஒட்டியாணமாகவும் போட வேண்டியது....காதுகளுக்கு மாட்டல்,நெத்திச் சுட்டி என்று ஒரு வழியாக டிரெஸ்ஸிங் படலம் முடிவடையும்..... இவ்வளவு செய்தும் பொம்மைகளின் பின் பாகம் இன்னும் பப்பி ஷேமாகத்தான் இருக்கும்...(கொலுவில் வைக்கும் போது பின் பாகம் தெரியாது என்பதால்)

அடுத்து தொடங்குவது 'படி' ரெடி பண்ணும் படலம்....வீட்டில் உள்ள எல்லா வகையான பொருட்களும் படி உருவாக்குவதில் பங்கு கொள்ளும்....டிவி டேபிள், ஹாலோ பிளாக் கற்கள், செங்கல், துணி போட்டு வைக்கும் பெட்டிகள், பழைய தகர டின்கள், பலகைகள் என்றெல்லாம் சிவில் எஞ்சினியர் லெவலுக்கு 'பிளான்' செய்து படிகளை அமைப்போம்.....படிகள் ரெடி ஆனதும் மடியாக துவைத்து உலர்த்திய வெள்ளை வேட்டியை அப்படியே அதன் மேல் போர்த்தி கொஞ்சம் கிளிப்பெல்லாம் போட்டு அட்ஜஸ்ட் செய்து விட்டால் படி ரெடி.....இங்கே ஒரு முக்கியமான விஷயம்....எங்கள் வீடு ஓட்டு வீடு என்பதால் வீட்டில் மழை வந்தால் ஒழுகாத இடமாகப் பார்த்து படி போட வேண்டும்...முதல் படியில் 'கடவுள்கள்' அதாங்க நம்ப மர பொம்மைகளை வைக்க வேண்டியது....அடுத்தடுத்த படிகளில் ராமர் செட், அஷ்ட லச்சுமி செட், தசாவதாரம் செட் போன்றவை....மண் பொம்மைகள்...பின் அடுத்த படிகளில் பிளாஸ்டிக் பொம்மைகள்.....அடுத்து குட்டி குட்டியான மர சாமான்கள் டின்னெர் செட்டுகள் , குட்டி குட்டி சமையல் பாத்திரங்கள், கவடைகள், சங்குகள் போன்றவை....கடைசி படியில் ஒரு குண்டு செட்டியார் பொம்மை வைத்து விட்டு சின்ன சின்ன எவர் சில்வர் கப்புகளில் அரிசி, பருப்பு, வெல்லம், வெந்தயம், மிளகு, போன்ற பலசரக்கு வைத்து செட்டியார் கடை ரெடி பண்ண வேண்டியது.....இந்த பண்டங்களை எல்லாம் ராத்திரி எலி சாப்பிட வந்து உருட்டி விடுவதும் உண்டு.....


நடுப் படியில் ஒரு வெள்ளி சொம்பில் மஞ்சள் நீர் ஊற்றி வெற்றிலைகளை விளிம்பில் வைத்து அதன் மேல் ஒரு மாதுளம் பிஞ்சு வைத்து கீழே மங்கள அரிசி பரப்பி கலசம் வைக்க வேண்டும்....நவ ராத்திரி கொலுவுக்கு இது தான் ரொம்ப முக்கியம்....ஒன்பது நாளும் இந்தக் கலசம் அசைந்து மாதுளம் பிஞ்சு விழுந்து விடாமல் இருக்க வேண்டும்....



எல்லாம் முடிந்ததும் கலர் பேப்பரை மீண்டும் வெட்டி கொலுவைச் சுற்றிலும் தொங்க விட்டு டெகரேட் செய்ய வேண்டியது....நடுவில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு போட்டால் பொம்மைக் கொலு ரெடி....சில சமயம் கொலுவின் பக்கத்தில் அக்கா 'பார்க்' போடுவாள்....ஈர மண்ணில் விதை விதைத்து கீழே பரப்பி , குட்டி குட்டி சேர், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், குட்டி மனித பொம்மைகள் ,நடை பாதை,வேலி என்று அமைத்து சீரியல் பல்பெல்லாம் போட்டு... பிறகு கொலுவை சுற்றியும் மெழுகி விட்டு கோலம் போட்டு செம்மண் பார்டர் கொடுக்க வேண்டும்....


இதை எல்லாம் முதல் நாள் செய்து விட்டுப் படுத்துக் கொள்ள ராத்திரி ஒரு மணி கூட ஆகி விடும்....


அடுத்த ஒன்பது நாளும் ஒரே களேபரமாக இருக்கும்....பூஜை, பாட்டு,பட்சணம், பெண்கள் விஜயம்...இவைகளை இரண்டாம் பாகத்தில் விவரிக்கிறேன்.... :)





~சமுத்ரா


அணு அண்டம் அறிவியல் - 5














'புற ஊதா பூகம்பம்' ஒரு வழியாக ஓய்ந்ததும் புராதன அறிவியல் சந்தித்த அடுத்த பிரச்சனை 'ஒளி மின் விளைவு' எனப்படும் 'photo electric effect .... ' அதாவது ஓர் உலோகத்தின் மீது ஒளியைப் பாய்ச்சினால் அந்த உலோகத்தின் எலக்ட்ரான்கள் ஒளியால் விடுவிக்கப்பட்டு அதில் மின்சாரம் தோன்றும்....சூப்பர் மார்கட் ஒன்றினுள் நீங்கள் நுழையும் போது அதன் கதவு தானாகவே திறக்குமே? அது எப்படி என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது இந்த ஒளி மின் விளைவு தான் ....ஒரு உலோகத்தின் மீது தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் ஒளியை நீங்கள் ஒரு கணப் பொழுது மறைப்பதால் அதில் தூண்டப்படும் மின்சாரம் தற்காலிகமாக நின்று போய் விடுகிறது....இதை 'அறிந்த' சில மோட்டார்கள்
இயங்கி உங்களுக்காக கதவை திறந்து விடுகின்றன.....

ஒளி என்பது ஓர் "அலையாகத்" தான் காலம் காலமாகக் கருதப்பட்டு வந்தது.....ஒளி ஓர் அலையாக இருக்கும் பட்சத்தில் ஒரு எலக்ட்ரான் ஒளியை கிரகித்துக் கொண்டு போதுமான அளவு ஆற்றலை அடைந்து அணுவை விட்டு வெளியேற கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.....(அலை முதலில் பூஜ்ஜியமாக இருந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகபட்ச அளவை அடைவதால்) ஆனால் ஆய்வு முடிவு எப்படி இருந்தது என்றால் ஒளியைப் பாய்ச்சிய அந்த கணப் பொழுதிலேயே (10 ^-9 sec ) தாமதம் சிறிதும் இன்றி எலக்ட்ரான்கள் வெளி வந்தன...

அடுத்து அப்போதைய இயற்பியல் கணக்கின் படி பாய்ச்சும் ஒளியின் செறிவு (intensity , amplitude ) அதிகமாக இருந்தால் அதன் மூலம் அதிக எலக்ட்ரான்கள் உமிழப்பட வேண்டும்....ஆனால் அதிக செறிவுள்ள ஒரு சிவப்பு ஒளியை (குறைந்த அதிர்வெண் கொண்ட ஒளி ) உலோகத்தின் மீது பாய்ச்சினால் எலெக்ட்ரான்கள் வெளிவரவே இல்லை....அதே சமயம் மிகக் குறைந்த செறிவே உள்ளஊதா நிற ஒளியை (அதிக அதிர்வெண் கொண்ட ஒளி ) பாய்ச்சும் போது எலக்ட்ரான்கள் அதிகம் வெளிவந்தன.....இந்த விஷயமும் ஒரு புரியாத புதிராக இருந்தது....

இந்தப் பிரச்சனையத் தீர்க்க வந்தார் நம் ஹீரோ ஐன்ஸ்டீன் (1879 -1955 ) .....மாக்ஸ் பிளான்க் மாதிரியே இவரும் கொஞ்சம் 'மாத்தி' யோசித்தார்.... அதாவது ஒளி கூட தொடர்ச்சியானது அல்ல....சிறு சிறு துகள்களால் ஆக்கப் பட்டது தான் என்றார் ....ஒளி ஒரு துகளாக இருப்பதால் (அந்த துகள் PHOTON என்று பின்னர் பெயரிடப்பட்டது) அந்தத் துகள் படுவேகமாகச் சென்று எலக்ட்ரானை மோதும் போது எலக்ட்ரான் உடனடியாக விடுவிக்கப் படுகிறது(delay எதுவும் இன்றி) ..... மேலும் இந்த
போடானின் ஆற்றல் அதன் அதிர்வெண்ணைச் சார்ந்தது....(அதாவது E =hv , h = பிளான்க் மாறிலி , v = அதிர்வெண் ) குறைந்த அதிர்வெண் கொண்ட போடான்கள் (சிகப்பு அலைகள்) ஒரு எலக்ட்ரானை சென்று மோதித் தள்ளும் அளவு ஆற்றலை கொண்டிருக்காததால் குறைந்த அதிர்வெண்களில் எலக்ட்ரான்கள் வெளிவருவதில்லை என்று ஐன்ஸ்டீன் சொன்னார்...

ஒளி சிறு சிறு துகள்களால் ஆனது என்பது இயற்பியலின் வரலாற்றில் ஒரு உன்னதமான கண்டுபிடிப்பு என்கிறார்கள்..... ஐன்ஸ்டீன் RELATIVITY போன்ற சிக்கலான பிற சமாசாரங்களைக் கண்டறிந்திருந்தாலும் அவருக்கு இந்த 'ஒளி மின் விளைவுக்' காகத் தான் நோபெல் பரிசு கொடுக்கப்பட்டது.....ஏனென்றால் RELATIVITY போன்ற சமாச்சாரங்கள் மிக மிக அதிக வேகங்களில்(கிட்டத்தட்ட ஒளியின் வேகம்) தான் செல்லு படியாகும்....அதற்கு தினப்படி உபயோகம் என்று எதுவும் இல்லை.....(practical purpose ) அதற்கு எப்படி நோபெல் பரிசு கொடுப்பது என்று நோபெல் பரிசு கமிட்டி திணறிக் கொண்டு இருந்தது....எனவே 'ஒளி மின்' விளைவுக்காக அவருக்கு நோபெல் வழங்கப்பட்டது....

ஐன்ஸ்டீனை 'ஒளியையே' கூறு போட்ட மனிதர் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு....

இது இப்படி இருக்க, அந்த ஒளியே "நான் துகள் அல்ல ,அலை அலை அலை அலை" என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்தது தாமஸ் யங் என்பவர் செய்த ஆராய்ச்சியில் ...

Monday, September 27, 2010

ராக ரஞ்சனி - ஆபேரி




உங்களிடம் ஒரு கார் டிரைவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்(காரும் இருக்கிறது) ...நீங்கள் அவசரமாக கொஞ்சம் தூரமான ஓர் இடத்திற்குப் போக வேண்டியுள்ளது....ஏம்பா டிரைவர்! கொஞ்சம் வண்டி எடுப்பா என்று அவரிடம் கூறுகிறீர்கள்.... அவர் அதற்கு 'அவ்ளோ தூரமெல்லாம் நான் வர முடியாது சார் ' என்று கூறி விட முடியுமா? "போகலாம் சார் , இதோ அஞ்சே நிமிஷம் வண்டி கொண்டு வந்துடறேன் " , என்று சொன்னால் தானே தன் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும்?

அதே போல் மஹா விஷ்ணு இருக்கிறார்... அவரின் வாஹனம் கருடன்....'ஹே கருடா, த்யாகராஜனுக்கு ஏதோ கஷ்டமாம், உடனே புறப்படு" என்று கூறினால் "தங்கள் சித்தம் சுவாமி" இதோ புறப்பட்டு விட்டேன் என்று தானே கூற வேண்டும்? ஆனால் இன்னும் ராமர் (விஷ்ணு) த்யாகராஜரின் முன் வரவில்லை...அப்படியானால் என்னவென்று எடுத்துக் கொள்வது?
அந்த கருடன் "சுவாமி வைகுண்டத்திற்கும் பூலோகத்திற்கும் ரொம்ப தூரம் சுவாமி" என்னாலெல்லாம் அவ்ளோ தூரம் பறக்க முடியாது...நீங்கள் வேண்டுமானால் ஒரு ஹெலிகாப்டரை அர்ரெஞ் பண்ணிக் கொள்ளுங்கள்' என்று அவரிடம் சொல்லி விட்டான் போல் அல்லவா உள்ளது?

கக ராஜு நீ ஆனதி வினி வேக சனலேடோ

ககனானிகி இலகு பஹு தூரம் அனிநாடோ?


(நீ ஆணையிட்டால் கருடன் வேகமாக முன்னேறிச் செல்ல மாட்டானா? இல்லை அவன் வானுக்கும் பூமிக்கும் ரொம்ப தூரம் என்று கூறி விட்டானா?)

ஆபேரியில் த்யாகராஜரின் அழகியதொரு கீர்த்தனை 'நகுமோமு கனலேனி'...(உன் சிரித்த முகத்தைக் காணாமல்) நாமெல்லாம் பெரும்பாலும் இதைக் கேட்டிருப்போம்...
ஆபேரியில் அவர் இயற்றியது இந்த ஒரு கீர்த்தனை தான் போல் தெரிகிறது....

ஆபேரி ஒரு சேய் ராகம்...கரஹரப்ரியாவிலிருந்து பிறந்த ராகம் (அது என்ன பெயர்
கரஹரப்ரியா???) ....இதன் ஏறு வரிசை இறங்கு வரிசை கீழே:

ஆரோஹனம்: ச க 2 ம 1 ப நி 2 ச

அவரோஹனம்: ச நி 2 த 2 ப ம 1 க 2 ரி 2 ச

ஆபேரியில் கர்நாடக இசைப்பாடல்கள் நிறைய இருப்பதாகத் தெரியவில்லை (பஜரே மானச (மைசூர் வாசுதேவாசாரியார்) வீணாபேரி (முத்துசாமி தீக்சிதர் )என்பவை விட்டு...
இப்போது நகுமோமுவை யேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டு விடலாம்

Get this widget | Track details | eSnips Social DNA

ஹிந்துஸ்தானி இசையில் ஆபேரிக்கு அருகில் வரும் ராகம்: "பீம்ப்ளாஸ்"

நகுமோமு பற்றி இன்னொரு தகவல்: அப்போதெல்லாம் இந்தப் பாடல் கச்சேரிகளில் பாடப்பட்டு வரவில்லையாம்.... (கொஞ்சம் 'western ' ஸ்டைலில் இருப்பதாலோ என்னவோ?)முதன்முதலில் இதைக் கச்சேரி செய்தவர் புல்லாங்குழல் வித்வான்ஸ்ரீ 'சரப சாஸ்திரிகள்' என்று கூறுவார்கள்...

ஓகே இனி சினிமாவுக்கு வருவோம்....

ஆபேரியில் சினிமாப் பாட்டு என்றதும் நினைவில் வருவது,, எஸ்,,,யு ஆர் கரெக்ட் ...."சிங்கார வேலனே, தேவா" சாஸ்திரிய சங்கீதத்தில் முறையான பயிற்சி இல்லாவிட்டாலும் எஸ்.ஜானகி அவர்கள் காரைக்குறிச்சிக்கு இணையாக வெளுத்து வாங்கியிருப்பார் இந்தப் பாட்டில் .....அடுத்து திருவிளையாடலில் வருமே "இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை"
சமீபத்திய உதாரணம் வேண்டும் என்றால் நித்யஸ்ரீ அவர்களின் குரலில் ஜீன்ஸ் படத்தில் பெரும் ஹிட் ஆன "கண்ணோடு காண்ப
தெல்லாம் தலைவா "

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா என்பது ஒரிஜினலாக எழுதப் பட்ட வரிகள் இல்லையாம்...கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வரிகள் அவை....வைரமுத்து முதன் முதலில் எழுதிய வரிகள் கீழே...இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்....

"விண்மீனை ஏன் அழைத்தாய் தலைவா
வீட்டில் வைத்து வளர்ப்பதற்கா ?"

இனி மேல் ஆபேரியில் எந்தப் பாடு கேட்டாலும் "ஜக மேலே பரமாத்மா எவரிதோ மொரலிடுது? (உன்னை அல்லால் வேறு யாரிடம் முறையிடுவேன்) என்று அழுது உருகிய த்யாகராஜரின் பக்தியைக் கொஞ்சம் நினைத்துக் கொள்ளவும்...

மற்றொரு ராகத்துடன் சந்திக்கலாம்....

~சமுத்ரா

Friday, September 24, 2010

அணு அண்டம் அறிவியல்-4 (எலி எப்படிப்பா வெளியே வந்துச்சு ?)





மாக்ஸ் பிளாங்கின் ஒரு தற்செயலான கண்டுபிடிப்பால் குவாண்டம் மெக்கானிக்ஸ் பிறந்தது என்று பார்த்தோம்....அது என்ன குவாண்டம் இயற்பியல்? என்று கேட்டால் மிகச் சிறிய தூரங்களுக்கான இயற்பியல் என்று சொல்லலாம்.... சாதாரண தூரங்களில் செயல்படும் விதிகள் மிகச் சிறிய தூரங்களிலும் செயல்படாதா என்று கேட்டால் படாது.... உதாரணமாக ஒரு பந்து உங்களிடம் உள்ளது.... அதை வீசி எறிகிறீர்கள்...இப்போது அந்த பந்தின் நிறை (mass ) அதன் தொடக்க நிலை (position ) மற்றும் திசை வேகம் ஆகியவை தெரிந்தால் அந்த பந்து சரியாக எங்கே போய் விழும் என்று ந்யூட்டன் விதிகளை வைத்துக் கொண்டு மிகச் சரியாகக் கூறி விடலாம்....ஆனால் இதே விதிகளை ஓர் எலக்ட்ரானிடம் காட்டினால் அது உனக்கும் பெப்பே உங்கள் அப்பனுக்கும் பெப்பே என்று பழிப்புக் காட்டி விடும்....அதாவது தூரம் குறையக் குறைய சமாச்சாரங்கள் 'சத்தியமான' (deterministic ) என்ற நிலையில் இருந்து 'சாத்தியமான' (probablistic ) என்ற நிலை நோக்கி நகருகின்றன....அதாவது இந்த எலக்ட்ரான் இங்கு தான் உள்ளது என்று வேட்டி எல்லாம் போட்டு தாண்டாமல் இந்த எலக்ட்ரான் இங்கு இருப்பதற்கு தான் சாத்தியக் கூறுகள் அதிகம் என்று சொல்கின்ற நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம்.....இப்போது குவாண்டம் இயற்பியல் பற்றி அறிமுகம் கொடுக்க ஒரு எலியையும் பூனையையும் எடுத்துக் கொள்வோம்.....(வேறு எதுவுமே கிடைக்கலையா?)

அந்த எலியை வெளியே வர முடியாத வகையில் ஒரு இரும்பு பெட்டிக்குள் விட்டு மூடி விடலாம்.... பிறகு நீங்கள் போய் ஒரு டீ குடித்து விட்டு வாருங்கள்....கொஞ்ச நேரம் கழித்து வந்தால் அந்த எலி வெளியே வந்து விட்டிருக்கிறது.... எப்படி வெளியே வந்தது?அதற்கு
சூத்திரம் எல்லாம் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.... இந்த மாதிரி எல்லாம் பழைய கால 'மாயா பஜார்' தமிழ்ப் படங்களில் மட்டும் தான் நடக்கும் என்று கூற வேண்டாம்.... குவாண்டம் இயற்பியலிலும் நடக்கும்....சரி அந்த எலி எப்படி வெளியே வந்தது? அஸ்கு புஸ்கு.....எல்லாம் நானே சொல்லணும்னா எப்படி? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க....

அடுத்து பூனைக்கு வருவோம்....இது இயற்பியல் படித்த எல்லாருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான சோதனை....Schrödinger's cat எனப்படும் ஸ்க்ரோடிஞ்சரின் பூனை.... ஒரு பூனையை ஒரு சீல் செய்யப் பட்ட பெட்டியில் விட்டு விட வேண்டியது....(சுவாசிக்கும் வசதியுடன்) அந்தப் பெட்டியில் தானாகவே சிதையும் ஒரு தனிமம் மிக மிகக் குறைந்த அளவில் வைக்கப் படுகிறது....தனிமம் தானாகவே சிதைகிறது என்றால் அது ஒரு மணி நேர காலத்தில் எப்போதாவதுசிதையலாம் அல்லது சிதையாமலும் இருக்கலாம்....அப்படி சிதைந்தால்
அதிலிருந்து வெளிப்படும் துகள் ஒரு கருவியை இயக்கி அந்தக் கருவி அந்தப் பெட்டியில் வைக்கப் பட்டுள்ள ஒரு விஷக் குப்பியை உடைக்கும்.....எனவே தனிமம் சிதைந்தால் விஷம் பரவி பூனை செத்து விடும்....

பெட்டி நன்றாக மூடப்பட்டுள்ளதால் வெளியே உள்ள ஒருவருக்கு பெட்டிக்குள் உள்ள தனிமம் சிதைந்ததா இல்லையா என்று உறுதியாகத் தெரியாது... அதாவது தனிமம் சிதைவதற்கு 50 % சாத்தியமும் சிதையாததற்கு 50 % சாத்தியமும் உள்ளன.... தனிமம் சிதைந்தால் பூனை செத்து விடும் என்பதால் பூனை சாவதற்கு 50 %
சாத்தியமும் பிழைத்திருப்பதற்கு 50 % சாத்தியமும் உள்ளன...பெட்டியத் திறந்து பார்த்தால் ஒழிய பூனை உயிருடன் உள்ளதா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது....(பூனையைத் தவிர)

குவாண்டம் மெகானிக்ஸ் சொல்வது என்ன என்றால் தனிமையில் உள்ள ஒரு பொருள் தனது எல்லா விதமான சாத்தியமான நிலைகளிலும் ஒரே சமயத்தில் இருக்கலாம் நாம் அதைப் பார்க்கின்ற வரை என்பது....அதாவது நாம் அதைப் பார்க்கும் அல்லது கவனிக்கும் (observation ) செயலே அதன் நிலையை மாற்றி விடுகிறது....என்ன கொஞ்சம் வேதாந்தம் மாதிரி இருக்கிறதா? குவாண்டம் மெகானிக்ஸ் அப்படி தான் இருக்கும்...கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.....உதாரணமாக ஆள் அரவமற்ற ஒரு காட்டில் ஒரு மரம் விழுந்து விடுகிறது.....மரம் விழுந்து விட்டது என்பது நாம் அதை அங்கு போய் பார்த்த பின் தானே தெரியும்? யாருமே பார்க்க வில்லை என்றால் அந்த மரம் விழுந்திருக்கலாம் அல்லது விழாமல் இருக்கலாம் என்று மட்டுமே கூற முடியும்...மேலும் நீங்கள் உங்கள் நண்பர் வீட்டுக்குச் சென்று அவர் வீட்டுக் கதவைத் தட்டுகிறீர்கள்....கதவை அவர் வந்து திறக்கும் வரை அவர் உள்ளே என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம்....அவைகளுக்கு எல்லாம் சமமான சாத்தியக் கூறுகள் உள்ளன....உதாரணமாக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருக்கலாம்....ஹிந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கலாம்... நியூஸ் கேட்டுக் கொண்டிருக்கலாம்....நமீதா டான்ஸ் ஆடுவதை ரசித்துக் கொண்டிருக்கலாம்... பஜ கோவிந்தம் படித்துக் கொண்டிருக்கலாம்.... ஆனால் அவர் வந்து கதவைத் திறக்கும் போது (நீங்கள் தட்டுவதால்) அவரன் 'ஒரே சமயத்தில் பல நிலை' சாத்தியக் கூறுகள் குறைக்கப் பட்டு நீங்கள் பார்த்ததும் ஒரே ஒரு திட நிலையில் உங்களுக்கு தோன்றுகிறார்.... அது போல ஓர் எலக்ட்ரானும் நாம் அதைக் கவனிக்கும் வரை எப்படி எப்படியோ என்ன என்னவாகவோ நிச்சயமின்றி இருக்கிறது.....நாம் கவனிக்கத் தொடங்கியவுடன் (ரொம்ப SHY டைப்போ???) சமர்த்தாக ஒரு நிலையில் காட்சி தருகிறது..... வகுப்பில் டீச்சர் வரும் முன்பு மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதேதோ நிலைகளில் இருப்பார்கள்....சினிமா பற்றி பேசிக் கொண்டும்....ராக்கெட் விட்டுக் கொண்டும்...தூங்கிக் கொண்டும் (சிலர் படித்துக் கொண்டும்) எப்படி வேண்டுமானாலும் ஆயிரம் நிலைகளில்....ஆனால் டீச்சர் வந்ததும் எல்லோரும் ஒரே மாதிரி ஒரு நிலையில் கப்-சிப் என்று அமர்ந்து விடுகிறார்கள் இல்லையா? ஆனால் டீச்சர் தான்ன் வருவதற்கு முன்னும் இவர்கள் இப்படி தான் இருந்தார்கள் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது,,,, அதே மாதிரி நாம் ஒரு எலக்ட்ரானைப் பார்க்கிறோம் அல்லது கவனிக்கிறோம்....ஆனால் அது நிஜமாலுமே அப்படி தான் இருக்கிறதா அல்லது நாம் பார்பதால் அப்படி இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது? டீச்சர் வருவதற்கு முன்னால் ஆட்டம் போட்ட பையன்கள் போல அந்த எலக்ட்ரான் நாம் கவனிக்கும் முன்னால் எப்படி இருந்ததோ?


எலக்ட்ரானை விடுங்கள் நிலா....சூரியன்....வானம்...பிரபஞ்சம் இதெல்லாம் நாமே இல்லா விட்டால் எப்படி இருக்கும்??? நாம் பார்பதால் தான் இவை எல்லாம் உள்ளனவா? இவை எல்லாம்உண்மையா இல்லை நம் பார்வைத் திரையில் பதியும் பிம்பங்களா?
மறுபடியும் இவை எல்லாம் சங்கராச்சாரியாரின் மாயாவாதம் அல்ல....குவாண்டம் அறிவியல் சோதனை செய்து நிரூபித்த உண்மைகள்....சொல்லப் போனால் அறிவியலில் மிகப் பிரபலமான ஒரு கொள்கை 'ANTHROPIC PRINCIPLE ' ...அது சொல்வது இது தான் :நாம் இருப்பதால் தான் இந்தப் பிரபஞ்சமே இருக்கிறது....இதைஎல்லாம் பார்க்கும் போது நம் இந்தியா ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன வேதாந்தங்கள் மற்றும் உபநிடதங்களின் பாதைக்கு அறிவியல் மெல்ல மெல்ல வந்து கொண்டிருப்பதாகக் கொள்கிறது....(தத்வமசி அதாவது "நான் இருப்பதால் தான் அதுவும் இருக்கிறது" இன்னும் உங்களைக் குழப்ப வேண்டும் என்றால் "reality has to be first observed to be reality " உண்மை அறிந்து கொள்ளும் போது தான் உண்மையாகிறது.....அல்லது தாத்தா இறந்து விட்டார் என்று யாராவது உங்களுக்கு போன் பண்ணும் வரை அவர் உயிருடன் தான் இருக்கிறார்.... )

சுருக்கமாகக் கூறினால் அறிவியல் 'கவனிப்பவனையும்' கணக்கில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டது....இது தான் புராதன அறிவியலுக்கும் நவீன அறிவியலுக்கும் உள்ள பெரியதொரு வேறுபாடு.....பு.அறிவியலில் கவனிப்பவனுக்கு இடம் இல்லை....மாடு கவனித்தாலும் மனிதன் கவனித்தாலும் F =ma தான்... .அறிவியலில் கவனிப்பவனுக்கு ஒரு மிக முக்கிய இடம் உண்டு.....

சரி பூனைக்கு வருவோம்.... நாம் இதுவரை கூறியதிலிருந்து நாம் பெட்டியைத் திறந்து பார்க்காத வரையில் பூனை உயிருடன் அதே சமயத்தில் இறந்தும் இருக்கலாம்....ஆனால் பூனை ஒரே சமயம் உயிருடனும் இறந்தும் இருக்க வாய்ப்பு இல்லை....பெட்டியைத் திறக்கும் போது ஒரு வேலை பூனை உயிருடன் இருந்து அதை 'ஏம்பா உள்ள நீ உயிரோட தான் இருந்தியா இல்ல கொஞ்ச நேரம் குவாண்டம் மெக்கானிக்ஸ் படி செத்துப் போனயா? என்று கேட்க முடியாது,,,,திறக்கும் போது உயிருடன் இருந்தது என்றால் உள்ளே எப்போதும் உயிரோடு தான் இருந்தது என்று அர்த்தம்....பூனை ஒரே சமயம் உயிருடன் மற்றும் செத்துப் போய் இருந்தால் இயற்கையானது நீங்கள் பார்க்கிறீர்கள் என்ற காரணத்திற்காக அந்தப் பூனையை சாகடிக்க முடியும்...(ஏனென்றால் பார்க்கும் போது ஒரு நிலை தான் பொருட்கள் காண்பிக்கும்) எனவே உள்ளே விஷக்குப்பி உடையவே இல்லை என்றாலும் கூட நீங்கள் பார்த்த ஒரு செயலே பூனையை சாகடிக்க முடியும்....

ஓகே ஐந்தறிவுள்ள பூனையை விடுங்கள்..... ஆறறிவுள்ள எங்களைக் கொன்று விடாதீர்கள் என்று யாரோ புலம்புவது காதில் விழுகிறது.... எனவே நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தப் பதிவு தற்காலிகமாக இங்கே முடிகிறது,.....

தொடரும்..... (ஐயோ இந்த ரேஞ்சுக்கு தொடர்ந்தால் தாங்க முடியாதுப்பா)

~சமுத்ரா






Thursday, September 23, 2010

ராக ரஞ்சனி -மோஹனம்



ராக
ரஞ்சனி என்ற தொடருக்கு வரவேற்கிறேன்... காகலி நிஷாதம், சதுஸ்ருதிதைவதம் என்றெல்லாம் ஓவராக சீன காட்டாமல் கர்நாடக ராகங்களுக்கு என்னால் இயன்ற ஒரு எளிய அறிமுகம்....

வனஜ நயன மோமுனு ஜூசுட

ஜீவன()னி நெனருன மனஸு மர்மமு தெலிஸி

நனு பாலிம்ப நட3சி வச்சிதிவோ நா ப்ராண நாத

-உன் தாமரை போன்ற முகத்தைக் கண்டு களிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ள என் மனதின் மர்மத்தை அறிந்து என்னைக் காக்க நடந்து வந்தாயா?ராமா?

இந்தப் பாடலை த்யாகராஜர் தனக்கு பக்தர் ஒருவர் 'ராமரின் அழகிய படம்' ஒன்றைப் பரிசளித்த போது பாடி பரவசமடைந்தார் என்று கூறுவார்கள்....சந்தோஷம் அதிகமாக இருக்கும் போது மோஹனம் போன்ற சுப ராகங்களைப் பாடுவது தானே தகும்? (முழு பாட்டையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)


மோஹனம் ஹரிகாம்போஜி என்று கூறப்படும் ஒரு தாய் ராகத்தின் குழந்தை(தாய் ராகம் என்றால் ஏழு ஸ்வரங்களும் ஒரே வரிசையில் வரும்)....மோகனம் 'நி' (நிஷாதம் ) 'ம' (மத்யமம்) என்ற இரு ஸ்வரங்களும் அற்று ஐந்தே ஸ்வரங்களுடன் வந்தாலும் அருமையான அழகியதொரு ராகம்.....இதன் ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசைகள் கீழே:

ஆரோகணம்:

ஸ ரி23 ப த2 ஸ்

அவரோகணம்:

ஸ் த2 ப க3 ரி2


பாபநாசம் சிவன் பார்வதி நாதன் சிவனை அழகாக வர்ணிக்கும் ஒரு பாடல் 'கபாலி' மோகனத்தில் கீழே கேட்கவும் விஜய் சிவா அவர்களின் குரலில் ...

Get this widget

|

Track details

|

eSnips Social DNA




அருணாச்சலக் கவி ராயர் ராமாயணம் முழுவதையும் பாடல்களாக எழுதியிருக்கிறார்.... அவர் ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ரங்க நாதரைப் பார்த்துக் கேட்கிறார்... ரங்க நாதா? ஏன் களைத்துப் போய் படுத்து விட்டாயா? ராமனாக நீ பிறந்த நாளிலிருந்தே உனக்கு கஷ்டம் தான்....வாழ வேண்டிய வயதில் வனம் சென்றாய்....மனைவியை மீட்பதற்கு இலங்கை என்னும் மாநகரையே அழித்தாய்....அந்தக் களைப்பெலாம் போகட்டும் என்று கால் நீட்டிப் படுத்து விட்டாயா என்று கேட்கும் பாடல்! மோகனத்தில்...பாடல் வரிகள் கீழே!
(இறைவனே படுத்துக் கொண்டு விட்டால் நாமெல்லாம் என்ன செய்வது என்று கேட்காமல் கேட்கிறார்)

ஏன் பள்ளி கொண்டீர் ஐயா

கௌசிகன் சொல் குறித்ததற்கோ- அரக்கி குலையில் அம்பு தெறித்ததற்கோ
ஈசன் வில்லை முறித்ததற்கோ? பரசு ராமன் உரம் பறித்ததற்கோ?
மாசில்லாத மிதிலேஷன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குகன் ஓடத்திலே கங்கை துரை கடந்த இளைப்போ?
ஓடிக் களைத்தோ தேவியை தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ?
லங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை மடித்த வருத்தமோ?

[பாட்டின் பொருள் கொடுத்து தமிழைக் கேவலப்படுத்த விரும்பவில்லை...:D )

பாடலை சுதா ரகுநாதன் பாட இங்கே கேட்கவும்...

மோகனம் எளிமையான அதே சமயம் பழமையான ஒரு ராகம்....தமிழிசையில் முல்லைப் பண் என்று அழைக்கப்பட்டதாம்....ஐந்தே ஸ்வரங்கள் இருந்தாலும் நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்கிற ஒரு ராகம்....இரவு வேளையில் பாட உகந்தது...

மோகனத்தில் வரும் பிரபலமான ஒரு வர்ணம் 'நின்னுக்கோரி' (வர்ணம் என்றால் அந்த ராகத்தை அப்படியே வர்ணிப்பது...)மற்ற பிரபலமான கர்நாடக இசைப் பாடல்கள் சில....

ரா ரா ராஜீவ லோச்சனா ராம -மைசூர் வாசுதேவாசாரியார்
ராம நின்னு நம்மினா - தியாகராஜர்
மெல்ல மெல்லனே பந்தனு - புரந்தரதாசர்
ஓடி பாரய்யா - புரந்தரதாசர்


சினிமா பாடல் சொல்ல வேண்டும் என்றால் 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' -காதல் கோட்டை........

அடுத்து
'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் 'ஒ மணப் பெண்ணே' பாடலின் நடுவில் வருமே? ஆஹா என்ன இதமான மோகனம்?


அதையும் தான் கேட்டு விடுங்களேன்....

(மோகனத்தை மட்டும் கேட்கவும்)

Get this widget

|

Track details

|

eSnips Social DNA


அடுத்ததாக மோகன ராகத்தில் நாம் எல்லோரும் பெரும்பாலும் கேட்டிருக்கக்கூடிய 'நீராரும் கடலுடுத்த' என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து...அதன் பொருள் தெரிந்துதான் ஸ்கூலில் எல்லாம் பாடினோமா என்று தெரியாது ...இப்போது அதன் பொருள் கீழே:

கடலையே உடையாக உடுத்த நில மகளுக்கு இந்த பாரத தேசம் தான் முகம்
அதில் தக்காண பீடபூமியானது அந்த முகத்தின் அழகிய நெற்றி
நம் தமிழ் நாடு அந்த நெற்றியில் இட்ட வாசனைத் திலகம்
அந்த திலகம் வாசனை வீசுவது போல, தமிழே, உன் புகழ் எல்லா திசைகளிலும் பரவுவதாக !

இதனைக் கொஞ்சம் கற்பனை செய்து வரைந்து பார்க்கலாம் என்று முயற்சி செய்ததில் சரியாகத் தான் வந்தது...ஆனால் என்ன நம் பூமியை மட்டும் கொஞ்சம் தலைகீழாகத் திருப்ப வேண்டி இருந்தது....:D






மீண்டும் மற்றொரு ராகத்துடன் சந்திக்கலாம்....

~சமுத்ரா


அணு அண்டம் அறிவியல்-3

மாக்ஸ் ப்ளாங்க்---- இயற்பியலின் புராதனப் பாதையை மாற்றிய மா மனிதன்....

இந்த பிரச்சனையை மாக்ஸ் ப்ளா
ங்க் எப்படி தீர்த்தார் என்று பார்க்கலாம்... 'பொருள்' என்பது தொடர்ச்சியானது என்ற கருத்து இயற்பியலில் எப்போதோ அடிபட்டு விட்டது... அதாவது உங்களிடம் ஒரு பேப்பர் இருக்கிறது... அதை கிழித்துக் கிழித்து மேலும் பேப்பர் துண்டுகளாக ஆக்கிக் கொண்டே போகலாம்.... இப்படியே போய்க் கொண்டே இருந்தால் பேப்பர் வருவது நின்று போய் அணுக்கள் வர ஆரம்பிக்கும்...( பேப்பர் என்பது சிறு சிறு அணுக்களால் ஆக்கப் பட்டது என்று தெரிய வரும்)... கம்ப்யூட்டர்- இல் தூரத்திலிருந்து ஒரு படத்தைப் பார்க்கிறோம் அது தொடர்ச்சியாக உள்ளதாகத் தெரிகிறது.....ரொம்பப் பக்கத்தில் போல் பார்த்தால் அந்த படம் சிறு சிறு தனித் தனி புள்ளிகளால் ஆக்கப்பட்டுள்ளது என்று தெரிய வரும்...சொல்லப் போனால் ஒரு படம் எவ்வளவு தெளிவாக உள்ளது என்று கூறும் 'Resolution ' என்பதை
அந்தப் படத்தில் எவ்வளவு புள்ளிகள் உள்ளன என்று தான் அளக்கிறார்கள்.... எனவே பொருள்(matter ) என்பது தொடர்ச்சியானது அல்ல .....நாமெல்லாம் அணுக்கள் என்னும் புள்ளிகளை நெருக்கமாக வைத்துப் போடப் பட்ட கோலங்கள் தான் ... (என்ன பெண்கள் புள்ளி வைத்துக் கோலம் போடுகிறார்கள் .... இயற்கை புள்ளிகளாலேயே கோலம் போடுகிறது)

மாக்ஸ் ப்ளாங்க் இதே கருத்தை ஆற்றலுக்கும் 'extend ' செய்தார் அவ்வளவே... அதாவது ஆற்றல் கூட தொடர்ச்சியானது அல்ல என்றார் .... வெப்பப் படுத்தப் படும் பொருளில் இருந்து வெளிப்படும் ஆற்றல் கூட தொடர்ச்சியாக வராமல் சிறு சிறு பொட்டலங்கள் (quanta ) ஆகத் தான் வெளிவரும் என்றார்... உதாரணம் நீங்கள் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி இருப்பதாகக் கொள்வோம்.... எப்படிக் கொடுப்பீர்கள்? (ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் செய்து விடுவோம் என்று கூறக் கூடாது ஆமாம்!) லட்ச ரூபாய் நோட்டு என்று ஒன்று இல்லை அல்லவா? எனவே தனித் தனியாகத் தான் கொடுக்க வேண்டும்.... அதிக பட்சம் ஆயிரம் ஆயிரமாக நூறு முறை கொடுக்கலாம்.....குறைந்த பட்சம் ஐம்பது பைசாக்களாக (இப்போதெல்லாம் ஐம்பது பைசா இருக்கிறதா என்ன?) இரண்டு லட்சம் தடவை கொடுக்கலாம் அல்லவா? அது மாதிரி தான் இயற்கை ஆற்றலை பல்க்காக (bulk ) வெளியே அனுப்பாமல் சிறு சிறு பெட்டிகளில் அடைத்து அனுப்புகிறது....

நீங்கள் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ஆற்றலை அனுப்ப வேண்டும் என்றால் குறைந்த பட்சம் இயற்கையின் ஒரு குட்டி 'கண்டெயினர்' ' ஐ உபயோகிக்க வேண்டும்... ஏ .டி. எம் இல் குறைந்த பட்சம் நூறு ரூபாய் தான் எடுக்க முடியும் என்பது போல...இந்த குட்டி கண்டையினரின் அளவை தான்
மாக்ஸ் ப்ளாங்க் கண்டறிந்தார். அதாவது ஒரு ஆற்றல் பொட்டலத்தின் ஆற்றல் E = h v ..... இங்கே h என்பது ப்ளாங்க் மாறிலி ....v என்பது அதிர்வெண்...இங்கே 'h ' இன் மதிப்பு என்ன தெரியுமா? h = 6.62606896(33)×10−34 JS இந்த ப்ளாங்க் மாறிலி என்பது இயற்பியல் உலகில் ஒரு முக்கியமான ஒரு எண்ணாகும்....இதன் முக்கியத்துவம் இன்னும் கூட ஆராயப்படுகிறது.... இது ரொம்ப ரொம்ப ரொம்ப சிறிய ஒரு எண்.. முருகப் பெருமான் அவ்வையைப் பார்த்து 'அவ்வையே சிறியது என்ன?' என்று கேட்டதாகக் கேள்வி.... அதற்கு அவர் 'முருகா சிறியது ப்ளாங்க் மாறிலி' என்று பதில் சொன்னாரா என்று தெரியவில்லை....இந்த எண் இயற்கையின் மிக மிகச் சிறிய அளவுகளைக் குறிக்கிறது.... அதாவது ப்ளாங்க் தூரம் என்பது 1.616252(81)×10−35 மீட்டர் ...எலெக்ட்ரான் ப்ரோடான் போன்ற அடிப்படைத் துகள்களை விட பலப்பல மடங்கு சிறியது....மனிதனால் கற்பனை செய்து பார்க்கக் கூடிய மிகக் குறைந்த தூரம் இது என்கிறார்கள்.... இந்த தூரத்தில் இயற்பியலின் அல்லது இயற்கையின் எல்லா விதிகளும் முடங்கிப் போய் விடும் என்றும் கூறுகிறார்கள்....(ஏன் ஒரு காலத்தில் நம் பிரபஞ்சமே இந்த சைசுக்கு தான் இருந்ததாக நம்புகிறார்கள்.....இந்த சைசில் தான் 'பெரு வெடிப்பு' (big bang) போன்ற அறிவியலால் கணிக்க முடியாத சில மாயாஜாலங்கள் நடக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்) இதே போல் 'ப்ளாங்க் காலம்' என்பது காலத்தின் மிகச் சிறிய அளவு ..இந்த குட்டியூண்டு தூரமும் காலமும் இப்போது இருக்கும் அதி நவீன இயந்திரங்களால் கூட அளவிட முடியாதவை என்பது குறிப்பிடத் தக்கது....


நம் ஒளியை உபயோகப் படுத்தி எந்த அளவு குறைந்த பட்ச ஆற்றலை அனுப்பலாம் என்றால் E = hv =
ப்ளாங்க் மாறிலி x ஒளியின் அதிர்வெண் = 6 .626 x 10 ^ -19 ஜூல். நமக்கு ஒளியால் கிடைக்கும் மொத்த ஆற்றல் இந்த மிகச் சிறிய ஆற்றலின் முழு மடங்காகவே இருக்கும்.... அதாவது E =n hv (n =0 ,1 ,2 ,3 ,4 ...) UV ஐத் தாண்டிய மிக மிக அதிக அதிர்வெண்களில் (குறைந்த அலைநீளங்களில்) ஏன் ஆற்றல் குறைந்து விடுகிறது என்றால் அந்த சிறிய பொட்டலமான E =hv என்பதைக் கட்டுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.... (V அதிகரிப்பதால்) இந்த ஆற்றல்கள் பெரும்பாலும் எலக்ட்ரான்கள் அதிர்வதால் உண்டாகின்றன என்று முன்னமே பார்த்தோம் .... இந்த அதிர்வுகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆற்றலை வெளிப்படுத்த முடியாது என்று ஒரு ஆதார விதி உள்ளது .... எனவே நம் பொட்டலத்தைக் கட்டத் தேவையான ஆற்றல் இந்த 'oscillation thermal energy ' (kT ) ஐ விட அதிகமாவதால் அதிக அதிர்வெண்களில் ஆற்றலே வெளிப்படுவதில்லை.... இது கொஞ்சம் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால் கீழ்க்கண்ட உதாரணத்தைப் பார்க்கவும்....இந்த உதாரணம் ஒரு 'கிட்டத் தட்ட' உதாரணம் தான் ......


உங்களிடம் ஒரு டிரம் நிறைய தண்ணீர் உள்ளது... அதை இன்னோர் இடத்திற்கு கொண்டு போய் நிரப்ப வேண்டும் என்று வைத்துக் கொள்ளலாம்... அதற்கு நீங்கள் ஒரு
ஸ்பூனைப் பயன்படுத்தலாம்.... ஒரு நாள் முழுதும் செய்து கொண்டிருக்க வேண்டியது தான்.... ஸ்பூன் வேண்டாம் என்றால் அடுத்த பொட்டலம் (கொஞ்சம் பெரியது) மக்கைப் (mug ) பயன்படுத்தலாம்... அதை விடப் பெரிய பக்கெட்டைப் பயன்படுத்தலாம்... இங்கே ஸ்பூன், மக், பக்கெட் என்பவையெல்லாம் வெவ்வேறு அதிர்வெண்களில் ஆற்றல் கடத்தப்படும் 'பொட்டலங்களை' குறிக்கும்.... நீரை வெளியேற்ற அந்த டிரம்மை விடவும் பெரிய ஒரு கொள்கலனைப் பயன்படுத்த வேண்டும் என்று கண்டிஷன் போட்டால் என்ன செய்வது? அது அசாத்தியம் அல்லவா? இந்த மாதிரி தான் மிக அதிக அதிர்வெண்களில் பொருளுக்கு பொட்டலம் கட்ட (அதிர்வுகளால் கிடக்கும் அக) ஆற்றல் இல்லாமல் போய் விடுகிறது....


மாக்ஸ் ப்ளாங்க் தனது ப்ளாங்க் நம்பரை சும்மா ஒரு கணித எண்ணாகத் தான் அறிமுகம் செய்தார்.. ஆனால் இந்த அறிமுகம் தான் பின்னாளில் ஐன்ஸ்டீன் மூலமாக குவாண்டம் இயற்பியலையே தோற்றுவித்தது... ப்ளாங்க்குக்கு தன்னுடைய 'குவாண்டா' எனப்படும் 'பொட்டலம்' என்கிற ஒரு எளிமையான கருத்து பின்னர் இயற்பியலின் பாதையையே மாற்றும் என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை.... ப்ளாங்க்கின் இந்த கண்டுபிடுப்புக்காக அவருக்கு 1918 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது....


தொடரும்....


Wednesday, September 22, 2010

அணு அண்டம் அறிவியல்-2c

இயற்பியல் வல்லுனர்கள் (1900 ஆண்டு வாக்கில்) ஒரு பொருளின் வெப்ப நிலைக்கும் அது வெளிவிடும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர்.... [அதிக வெப்ப நிலையில் அதிக அதிர்வெண் கொண்ட அலைகள் (அதிக அதிர்வெண் என்றால் அதிக ஆற்றல்) பொருளில் இருந்து வெளிப்படும் என்று பார்த்தோம்.... அதிக அதிர்வெண் என்றால் குறைந்த அலைநீளம்.... இயற்பியல் அதிர்வெண்ணுக்கும் அலை நீளத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்க்கண்டவாறு சொல்கிறது
அதிர்வெண் x அலைநீளம் = எப்போதும் மாறாத எண் (constant ) ....

இந்த மாறாத எண் தான் மின் காந்த அலைகளின் வேகம் என்று சொல்லப்படுகிறது.... அதாவது இவை (எந்த அலைகளாக இருந்தாலும் சரி, ஒளி உட்பட) வெற்றிடத்தில் ஒரு நொடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் பயணிக்கின்றன....]

சுருக்கமாக சொன்னால் பொருளில் இருந்து வெளிப்படும் ஆற்றல் (அதன்) குறைந்த அலைநீளங்களில் அதிகமாக இருக்கும்....இதை ஆராய்ச்சி சாலையில் சோதனை செய்து பார்க்க நமக்கு BLACKBODY என்கிற கரும்-பொருள் (not to be confused with dark matter ) ஒன்று வேண்டும்....அது என்ன BLACKBODY ? சாதாரண ஒரு உலோகத்தை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தக் கூடாதா என்றால் ஒரு காரணம் இருக்கிறது...

ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஆற்றலை முழுவதுமாக அளக்க வேண்டும் என்றால் அந்தப் பொருள் தனக்குத் தரப்படும் எல்லா ஆற்றலையும் வெளியே தள்ளி விடுவதாக (radiation ) இருக்க வேண்டும்... (அதாவது உள்ளே நிரந்தரமாக கிரகித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்) சாதாரணமான ஒரு பொருள் ,இரும்புக் கம்பி என்று வைத்துக் கொண்டால் அது தனக்குத் தரப்படும் வெப்ப ஆற்றலில் ஒரு சிறு பகுதியை உள்ளே நிரந்தரமாக கிரகித்துக் கொள்ளும்....மிச்சத்தைத் தான் மின் காந்த அலையாக வெளியே விடும்... ஆனால் இந்த BLACKBODY (உதாரணம் : கிராபைட்) என்பது தனக்குத் தரப்படும் எல்லா ஆற்றலையும் முழுவதுமாக கிரகித்துக் கொண்டு பின் முழுவதையும் கதிரியக்கமாக வெளியே விடக் கூடியது.... அதனால் இயற்பியல் ஆசாமிகள் தங்கள் ஆய்வுக்காக இந்த BLACKBODY யை எடுத்துக் கொண்டார்கள்.... (ஆற்றலை முழுவதுமாக அளக்க முடியும் என்பதாலும் ,BLACKBODY யின் ஆற்றல் அது வெளியிடும் அலைகளின் அலைநீளத்தை "மட்டும்" சார்ந்திருக்கும் என்பதாலும்) ஆனால் இயற்கையில் எந்த பொருளுமே பக்கா BLACKBODY ஆக கிடைப்பதில்லை.. எனவே அவர்கள் ஆராய்ச்சிக்காக பெரிய வெப்ப உலை (furnace ) ஒன்றின் சுவரில் போடப்பட்ட சிறிய துளையை BLACKBODY ஆக பயன்படுத்தினர்....


அப்போதைய இயற்பியல் கணித்த படி கதிரியக்க ஆற்றலானது அலைநீளத்தின் நான்கு மடிக்கு எதிரிடைத் தொடர்பு உடையது....அதாவது
ஆற்றல் = constant / (அலைநீளம்)^4 (Rayleigh–Jeans law )
எனவே ஆற்றலானது குறைந்த அலை நீளங்களில் (அதிக அதிர்வெண் அதாவது அதிக வெப்ப நிலைகளில் )மிக மிக அதிகமாக இருக்க வேண்டும்...ஆனால் BLACKBODY ஆராய்ச்சி முடிவுகள் எப்படி இருந்தன என்றால் பொருளின் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் வரை அதிகரித்து விட்டு பின்னர் கீழே இறங்கத் தொடங்கியது... கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்...




படத்தின் வலது ஓரத்தில் உள்ள கறுப்பு வளைவு இயற்பியல் விதிகளின் படி கணிக்கப்பட்டது.... அதாவது அலைநீளம் குறையக் குறைய ஆற்றல் முடிவிலியை நோக்கிச் செல்கிறது.... ஆனால் படத்தில் காட்டப்பட்டுள்ள நீளம், பச்சை மற்றும் சிகப்பு வளைவுகள் ஆராய்ச்சி முடிவுகள் ஆகும்.. அதாவது 5000 K வெப்பநிலையை எடுத்துக் கொண்டால் ஆற்றல் மெல்ல மெல்ல அதிகரித்து (500 நானோ மீட்டர் அலைநீளங்கள் வரை) பின்னர் அதை விடக் குறைந்த அலைநீளங்களில் சமர்த்தாக கீழே இறங்கி விடுகிறது,,,, (சறுக்கலில் குழந்தைகள் மெல்ல மெல்ல படிகளில் ஏறி மீண்டும் கீழே சறுக்கி விடுவது போல ) இந்த ஒரு சமாசாரம் அன்றைய நாட்களில் ரொம்பவே குழப்பியது... அது எப்படி அதிக அதிர்வெண்களில் ஆற்றல் குறைந்து விடுகிறது என்பது (அப்படி மட்டும் குறையவில்லை என்றால் நம் சூரியனின் ஆற்றல் முடிவிலியாக இருந்து நாமெல்லாம் ஒரு சில நிமிடங்களில் வாணலியில் போட்ட வெண்ணை கணக்காக உருகி விடுவோம்...இயற்க்கைக்கு நம்மை விட அதிக அறிவியல் அறிவு உள்ளதாகத் தெரிகிறது )


அதிக அதிர்வெண்ணில் ஆற்றல் குறைவதால் இந்த பிரச்சனை 'புற ஊதா' பூகம்பம் என்று அழைக்கப்பட்டது.... (அந்த சமயத்தில் அறியப்பட்ட அதிக அதிர்வெண் கொண்ட அலைகள் புற ஊதாக் கதிர்கள் என்பதால்.... x -ray கதிர்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை)

தர்க்க ரீதியாக இந்த முடிவு சரியாகத் தோன்றினாலும் இதை விளக்க அறிவியலில் அப்போது எந்த கொள்கையும் இல்லை... இந்த சமயத்தில் தான் (1900 ஆம் ஆண்டு) குவாண்டம் இயற்பியலின் தந்தை என்று அழைக்கப் படும் மாக்ஸ் பிளான்க் (MAX PLANCK ) என்ட்ரீ ஆகிறார்....


ஒருவர் இவ்வாறு மறு மொழி கூறியிருப்பதால் மீதி அடுத்த பதிவில்..."ஒரேயடியா இம்புட்டும் சொன்னா கஷ்டமா இருக்கு... 2 அ பிரிச்சு போடுங்களேன்... :)"

தொடரும்...