இந்த வலையில் தேடவும்

Friday, January 21, 2011

செய்ததெல்லாம் மறந்தாயோ?(சிறுகதை)


காமு சமைத்து வைத்து விட்டு வெகு நேரம் காத்திருந்தாள்..மணி எட்டு ஆனது..ஒன்பது ஆனது...ரைஸ் மில்லின் ஒன்பதரை சங்கு கூட ஊதி விட்டது..இன்னும் அந்த மனுஷனைக் காணவில்லை...காமுவுக்கு ஆத்திரம், அழுகை, வேதனை எல்லாம் ஒன்று திரண்டு கண்ணீராக வெளிப்பட்டது...

சரியாக பத்து மணிக்கு சந்துரு உள்ளே வந்தான்..கால் கழுவிக் கொண்டு வந்து "காமு, பசிக்குது , சாப்பாடு எடுத்து வை" என்றான்.

"இங்கே ஒருத்தி சாப்பிடாம உங்களுக்காக காத்திருக்கேன்ற நெனைப்பே இல்லையா உங்களுக்கு..வீட்டுக்கு வர நேரமா இது? போஸ்ட் ஆபீஸ் ஆறு மணிக்கே மூடியிருக்குமே இது வரைக்கும் எங்க போனீங்க"? என்றாள்..அவள் முகம் எந்த சலனத்தையும் காட்டாமல் இருந்ததில் இருந்து ஏதோ ஒரு வழக்கமான பதிலை அவனிடமிருந்து எதிர்பார்ப்பது போலத் தோன்றியது..

"சாரி காமு, இன்னிக்கு டவுன் ஹால்ல ரஞ்சனி- காயத்ரி கச்சேரி ஆறு மணிக்கு...நான் போறதுக்கே ஏழு ஆயிருச்சு..உட்காரக் கூட இடம் கிடைக்கலை..அப்படியே நின்னுட்டே கேட்டேன்..அஹா அற்புதம்..நாட்டக் குறிஞ்சில 'வழி மறைத்திருக்குதே' ன்னு என்னமா உருகி உருகி பாடினா தெரியுமா? " என்றான் சந்துரு..ஒரு நொடியில் அவன் முகம் பரவசமாக மாறியிருந்தது.."அப்புறம் அந்த காம்போதியை"..

"போதும் ...வருஷம் முன்னூத்து அறுபத்தஞ்சு நாளும் கச்சேரி, கல்யாணி, காம்போதி இதே தானா? உங்க ப்ரோமோஷன் விஷயமா சுகுமாரைப் பார்க்கச் சொன்னேனே, அது என்னாச்சு?"என்றாள்

"அவன் லஞ்சம் கேட்கறாண்டி.. அன்னைக்கே சொன்னேன்ல.."

தட்டில் சாம்பார் ஊற்றிக் கொண்டே காமு தொடர்ந்தாள்..."லஞ்சம் கேட்கத்தான் செய்வான்..நாம தான் காரியம் ஆகணும்னா நாலு இடத்துல அர்ரெஞ் பண்ணிக் குடுக்கணும்.. ஏன் நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க?..நான் என்ன காரு பங்களாவா கேட்டேன்?..மத்த பெண்கள் சொல்றது மாதிரி நானும் என் புருஷன் நல்ல வேலைல இருக்கார்னு சொல்லிக்க ஆசைப்படறது தப்பா சொல்லுங்க "? என்றாள்.அவள் கண்கள் பனித்திருந்தன...

சந்துரு எதுவும் பேசவில்லை..

சந்துரு மற்றும் காமுவின் இடையே கடந்த பல வருடங்களாக இதுமாதிரி தான் சம்பாஷாணைகள் இருக்கின்றன...கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகப் போகிறது..குழந்தைகள் இல்லை..இன்னும் சந்துருவுக்கு போஸ்ட்-ஆபீசில் மெயில்-பேக் கலெக்ட் செய்யும் நிரந்தரமில்லாத வேலை தான்..ஆனால் சந்துருவிற்கு சங்கீதத்தில் அபார ஞானம்..
குடும்ப சூழ்நிலை காரணமாக முறையாகக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் கேள்வி ஞானத்தால் ஒரு கச்சேரியே செய்யக் கூடிய அளவு உயர்ந்திருந்தான்..சந்துருவின் உலகம் எல்லாம் காலை எட்டு மணிக்கு வேலைக்கு கிளம்ப வேண்டியது..மத்தியானம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பாட்டு..மீண்டும் மூன்று மணி ட்யூட்டி..ஆறரை மணிக்கு வந்தால் ரேடியோவை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போய் விட வேண்டியது..பதினொரு மணிக்கு ஹிந்துஸ்தானி எல்லாம் கேட்டு விட்டு கீழே வந்து தான் சாப்பாடு..அப்புறம் ஸ்ரீராம நவமி, நவராத்திரி, மார்கழி என்று வருடம் தவறாமல் நடக்கும் கச்சேரிகளுக்கு சென்று விட்டு மெய்மறந்து போவது..

காமு ஒரு சராசரிப் பெண்..சங்கீதத்தில் எல்லாம் அவ்வளவாக ஈடுபாடு இல்லை..இல்லறத்தின் கனவுகளோடு
ம் ஆசைகளோடும் வாழும் ஒரு சராசரிப் பெண்..தன் கணவன் மற்றவர்களைப் போல் இல்லையே என்ற குறை அவளை உறுத்திக் கொண்டே இருந்தது..

சந்துரு அவள் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்கிறபடி தெரியவில்லை.. "புருஷங்க மாதிரி எங்கையாவது வெளில கூட்டிட்டுப் போறீங்களா? ஒரு ஸ்கூட்டர் உண்டா? சினிமா உண்டா? ரெண்டு மாசம் வாடகை பாக்கி ஞாபகம் இருக்கா? "என்று அவள் ஆராம்பித்தால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவது அவன் வழக்கம்..

அன்றைக்கு எப்படியோ அந்த கசப்பான சம்பவம் நடந்து விட்டது..

காமு தன் தூரத்து சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் நடந்த குழந்தையை தொட்டிலில் போடும் விழாவுக்கு போயிருந்தாள்..பாவம் அவளுக்கும் எத்தனை நேரம் தான் வீட்டிலேயே இருந்து கொண்டு பக்கத்து வீட்டில் இரவல் தரும் பழைய பத்திரிக்கைகளைப் படித்துக் கொண்டிருப்பது? தன்னிடம் இருந்த சேலைகளிலேயே சுமாரான ஒன்றையும் இருந்த சொற்பத் தங்கத்தையும் அணிந்து கொண்டு சென்றாள்..

யாரும் அவளைக் கண்டு கொள்ளக் கூட இல்லை.."வா காமு" என்று அழைத்ததோடு சரி..அதெல்லாம் அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை..அந்தப் பெண்களின் கணவர்கள் பேங்குகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் உயர்ந்த பதவிகளில் இருக்கக்கூடும்..இதெல்லாம் அவளுக்கு சகஜம் தான்..

காமு குழந்தையை வாரி அணைத்து மார்போடு வைத்துக் கொஞ்சி விட்டு ,கொண்டு வந்திருந்த பத்து ரூபாயை அதன் கைகளில் திணித்தாள்..வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு புறப்பட்டபோது பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது: "அலமேலு, குழந்தைக்கும் அவன் அம்மாவுக்கும் நல்லா திருஷ்டி சுத்திப் போட்டுடு..மலடி கண்ணு முண்டக் கண்ணு எல்லாம் நல்லா கழியட்டும் " என்று...

அதைக் கேட்டு விட்ட காமுவுக்கு உலகமே பின்னால் இடிந்து விழுவது போல இருந்தது..அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் வீட்டுக்கு வந்தாள்..தனக்கு ஒரு குழந்தையைக் கூட தர முடியாமல் சங்கீதத்தைக் கட்டிக் கொண்டு அழும் கணவன் மேல் எரிச்சலாக வந்தது..சமைக்கக் கூடத் தோன்றாமல் அழுது கொண்டே இருந்தாள்..

வழக்கம் போல கணவன் கச்சேரி எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அந்த வீட்டில் சில அசாதாரண சம்பவங்கள் அரங்கேறின..பத்து வருடமாகப் போட்டு
ப் புழுங்கிக் கொண்டிருந்த எல்லாவற்றையும் அவன் முன் போட்டு உடைத்தாள் காமு ..கணவனின் ஆண்மையை சந்தேகித்தாள்..என்னென்னவோ பேசி விட்டாள்..

சந்துருவுக்கு அவளுக்கு ஏதோ பேய் பிடித்து விட்டது போலத் தோன்றியது..எதுவும் பேசாமல் நிதானமாக மாடிக்கு
ச் சென்று ரேடியோவை ஆன் செய்தான் ..ரேடியோவில் தோடி இனிமையாகக் கசிந்து வந்தது...ஆனால் காமு மாடிக்கும் வந்து விட்டாள்..அவனது அருமை ரேடியோ தரையில் ஆக்ரோஷமாக வீசப்பட்டு உடைக்கப்பட்டது ..அவன் அரும்பாடு பட்டு எழுதி வைத்திருந்த பாட்டு நோட்டுகள் கிழித்து வீசப்பட்டன..

அன்றைய இரவு அவர்கள் இருவரின் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத கசப்பான இரவாக இருந்தது..

காலையில் ஏழு மணிக்கு தான் காமு எழுந்திரித்தாள்..நேற்று இரவு நடந்து கொண்டதை நினைத்து அவளுக்கு வெட்கமாக இருந்தது..ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டோம் ..முதலில் சென்று கணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..கல்லானாலும் கணவன் அல்லவா? என்று நினைத்துக் கொண்டு காபி போட்டு எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்..
அவனுக்கு சன்ரைஸ் பிடிக்கும் என்பதால் அவசர அவசரமாகக் கடைக்குப் போய் சன்ரைஸ் வாங்கி வந்தாள்..

மாடியில் சந்துருவின் படுக்கையில் அவனுக்குப் பதில் ஒரு கடிதம் தூங்கிக் கொண்டிருந்தது..

"அன்புள்ள காமுவுக்கு...இது நாள் வரையிலும் நான் உனக்கு எவ்வளவு தொந்தரவாக இருந்திருக்கிறேன் என்பதை நேற்று இரவு தெரிந்து கொண்டேன்..ஏனோ நம் பாதைகள் ஒத்துப் போகவில்லை..எனவே நான் போகிறேன்..கவலைப்படவேண்டாம்..உனக்கு மலடி என்ற பட்டத்தை
த் தந்த நான் விதவை என்ற பட்டத்தையும் தரமாட்டேன்..உயிரோடு தான் இருப்பேன்..இனி என் சங்கீதம் தான் என் வாழ்வு..என்னைத் தேட முயற்சிக்க வேண்டாம்...நேற்று இரவே ரயில் ஏறி விட்டேன்..உன்னை விட்டு வெகு தூரம் போகிறேன்.."

காமு அந்த இனிய காலைப் பொழுதின் நிசப்தத்தைக் கலைக்கும் படி ' ' என்று அலறினாள்..

-
--
---
----
-----
------
-------
--------
---------
----------

என்ன இது ? ஆமாம் பத்து வருடங்கள் உருண்டு ஓடி விட்டன பாருங்கள்..


சரஸ்வதி கான சபாவின் வாசலில் அழுக்கு உடைகளுடனும் மழிக்கப்படாத தாடியுடனும் ஒரு பெரியவர் வந்து நின்று தயங்கி
த் தயங்கி உள்ளே போகிறார்...செக்யூரிட்டி அவரைத் தடுத்து டிக்கெட் கேட்கிறார்..அவர் டிக்கெட் இல்லை என்கிறார்.."ஏன்யா இப்படி சாவுகிராக்கிஎல்லாம் வந்து உயிரை வாங்கறீங்க...இங்கே சாப்பாடு எல்லாம் போடமாட்டாங்க போங்க" என்கிறார் செக்யூரிட்டி..அப்போது உள்ளே நுழையும் ஒருவர் அந்தப் பெரியவரையே உற்றுப் பார்க்கிறார்..ஏதோ கேட்டு விட்டு அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார்....செக்யூரிட்டியை கண்களால் கண்டிக்கிறார்..

உள்ளே கூட்டம் என்றால் அவ்வளவு கூட்டம்..மக்கள் காமாட்சி சந்திரசேகரனின் பாட்டைக் கேட்க ஆவலாய்க் காத்திருந்தார்கள்..

காமாட்சி சந்திரசேகரன் மேடையில் வந்து அமர்ந்ததும் கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது...எளிதான உடைகளுடன் ஒரு சன்யாசினி போலத் தோன்றினார் அவர்..

இறைவனைக் கண் மூடி வணங்கி விட்டு மெல்லிய குரலில் அவர் பேச ஆரம்பித்தார்..."நான் இன்று உங்கள் மனம் கவர்ந்த பாடகியாக உங்கள் முன் அமர்ந்திருப்பதற்குக் காரணம் என் கணவர் தான்..நான் பெரிய சங்கீத பரம்பரையில் பிறக்கவில்லை..சங்கீதத்தில் ஈடுபாடு காட்டவும் இல்லை..மாறாக சங்கீதத்தையும் அதை உயிராக நினைத்திருந்த என் கணவரையும் வெறுத்தேன்..சாதாரணப் பெண்கள் போல உலக ஆசைகளில் சிக்கிக் கொண்டு சங்கீதம் என்ற அருமையான கலையின் மீது துவேஷம் காட்டினேன்..இதனாலேயே நான் என் அருமைக் கணவரைப் பிரிய நேரிட்டது..அவர் பிரிந்ததும் நான் விரக்தியில் குளத்திலோ கிணற்றிலோ விழுந்து வாழ்வை முடித்துக் கொண்டிருக்க முடியும்.ஆனால் அன்று ஒரு உறுதி எடுத்துக் கொண்டேன்..அன்றிலிருந்து என் வாழ்க்கை நூற்று-எண்பது கோணத் திருப்பம் கண்டது..சங்கீதம் என் உயிரானது..என் வாழ்க்கையை சங்கீதத்திற்கு அர்பணித்தேன்..என் ஆசைகளைத் துறந்து சங்கீதத்தின் மீது பைத்தியமாகி அசுர சாதகம் செய்தேன்..எந்த சங்கீதத்தால் நான் என் கணவனை இழந்தேனோ அதே சங்கீதம் அவரை எனக்கு ஒருநாள் மீட்டுத் தரும் என்று திடமாக நம்புகிறேன்..அன்று எங்களுக்குக் குழந்தை இல்லை என்று அவரைக் குறை கூறினேன்..இன்று சொல்கிறேன் அவர் எங்கிருந்தாலும் இதை இறைவன் அவரது செவிகளில் கொண்டு சேர்க்கட்டும்...எங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல..நூற்றுக் கணக்கான குழந்தைகள்.. சாருகேசி ஒரு குழந்தை..பைரவி ஒரு குழந்தை,ரஞ்சனி ஒரு குழந்தை,கல்யாணி ஒரு குழந்தை..தோடி ஒரு குழந்தை..ம்ம்..அன்று என்னைப் பிரியும் போது அவர் கடைசியாகக் கேட்டது தோடி..சரியாக பத்து வருடங்கள் முன்பு இதே நாளில்..இன்று அதையே நான் இங்கே பாடுகிறேன்..இந்தத் தோடி அவர் பாதங்களுக்கு சமர்ப்பணம்"

இவ்வாறு நிதானமாகப் பேசி விட்டு
காமாட்சி சந்திரசேகரன் தோடியை ஆரம்பித்தார்..

அவரது ஆலாபனையில் அந்த அரங்கமே கட்டுண்டு கிடந்தது..

தோடியில் "ஜேஸினதெல்லா மறசிதிவோ" (செய்ததெல்லாம் மறந்தாயோ?) என்ற த்யாகராஜர் கீர்த்தனையை ஆரம்பித்தார்...

ஹாலின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்தப் பெரியவரின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடிக்கொண்டிருந்தது..



~சமுத்ரா





10 comments:

எல் கே said...

நல்ல எளிய நடை நண்பா

கணேஷ் said...

நல்ல கதை...தொடர்ந்து எழுதுங்கள்..

ப.கந்தசாமி said...

நல்ல சிறுகதை. பாராட்டுகள்.

bandhu said...

நல்ல கதை. சங்கீதத்தை பின்னி பிணைந்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Chitra said...

Good one. Congrats!

sury siva said...

இசை இணைக்கவே செய்யும் என்பார்கள்

இசையிலும் கர்னாடக சங்கீதம் தனி.
அதில் மனம் லயித்துவிடின் உலகின் மற்ற சுகங்கள் இருப்பதே கண்முன் வாராது.

இசையில் லயித்துடும் மனைவியும், கணவனின்
இன்பதுன்பங்களில் ஒன்று நிற்கும் மனைவியும்
ஈசன் தரும் வரும்.
ஒரு கோணத்தில் பார்த்தால், அவை நம்
பூர்வ ஜன்ம பலன்.
Excellent narration. Has happened in many a family.
சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com

சுரேஷ் சீதாராமன் said...

Nice

Unknown said...

நல்ல சிறுகதை.. வாழ்த்துக்கள்.. சங்கீதத்தில் அதிக ஈடுபாடா உங்களுக்கு?

கோநா said...

good flow, nice story but very dramatic ending samudra.

சிவகுமாரன் said...

ஒரு குறும்படம் பார்த்த உணர்வு.
இது போன்ற அபலைப் பெண்கள் தவறான முடிவு எடுக்கக் கூடாது என்று சொல்லும் முடிவு.
அருமை நண்பா.