இந்த வலையில் தேடவும்

Monday, May 23, 2011

கலைடாஸ்கோப் -18

லைடாஸ்கோப் -18 உங்களை வரவேற்கிறது

இந்த முறை கலைடாஸ்கோப் முழுவதும் ஒரே டாபிக் தான்..

இயற்கையின் மடியில் -1
======================

எப்போதுமே நமக்கு Botany , zoology என்பதெல்லாம் அலர்ஜியான விஷயங்கள். இதற்கு முக்கியமான காரணம் அதில் வரும் தாவரங்கள் விலங்குகளின் வாயில் நுழையாத அறிவியல்(லத்தீன்) பெயர்களாக இருக்கலாம். தாமரை இதழ் போன்ற கண்கள் என்று வர்ணித்தால் அதை கவிதை எனலாம். 'நிலம்போ நூசிஃபெரா (Nelumbo nucifera )' போன்ற கண்கள் என்று
எழுதினால் அது படிப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பதில்லை.

ஆனால் விலங்குகள் மீதும் பறவைகள் மீதும் காடுகள் மீதும் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது சமீபத்தில் attend செய்த ஒரு Nature Camp ..

இயற்கையை நேசிக்கும் உள்ளம் கொண்ட சில மனிதர்களால் இந்த Camp நடத்தப்படுகிறது. பெரும்பாலும் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், வக்கீல்கள், பணியில் உள்ள சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் போன்றவர்களால் நடத்தப்படுகிறது. இன்று நிறைய பேர் 'இயற்கையைப் பாதுகாப்போம், காடுகளை பாதுகாப்போம்' என்று நான்கு சுவர்களுக்குள்
உட்கார்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் 'ஸ்லைடு' போட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் (USHA CHARITABLE TRUST , பெங்களூர்) அப்படி இல்லாமல் இயற்கை களிநடனம் ஆடும் ஓர் இனிய சூழலுக்கு நம்மை அழைத்துச் சென்று அங்கே நமக்கு காடுகள் பற்றியும், Wild life பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

வெஸ்டர்ன் காட்ஸ் என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் குஜராத்தில் இருந்து தமிழ் நாடுவரை நீள்கின்றன. மழைக்காடுகள் நிறைந்த இந்த மலைத்தொடர்கள் BIO DIVERSITY எனப்படும் உயிர்ப்பன்மை க்குப் பெயர் பெற்றவை. குதுரே முக், நீலகிரி, முன்னார், ஜோக் நீர்வீழ்ச்சி என்று நிறைய சுற்றுலாத் தளங்கள் இதில் தான் உள்ளன.கடல் மட்டத்தில்
இருந்து சுமார் நாலாயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலைத்தொடர்களில் சுமார் 5000 தாவர வகைகள்,500 பறவை வகைகள், சுமார் 150 விலங்கின வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மனிதன் மட்டும் போதாதா? எதற்கு இத்தனை விதம் விதமான உயிரினங்கள்? பாக்டீரியாவில் இருந்து தொடங்கி நீலத்திமிங்கலம் வரை கலர் கலராக உயிரினங்கள்? உலகில் உள்ள மனிதர்களின் மொத்த எடையை மிஞ்சக்கூடிய பூச்சி வகைகள்? நினைத்துப் பார்த்தால் இயற்கை கஞ்சூஸ் -ஆக இல்லை என்று தெரிகிறது. Nature believes in abundance ! ஒரு விதத்தில் பார்த்தால் நாமெல்லாம் வாழ்வதற்கு சூரிய மண்டலம் மட்டும் போதும்..எதற்காக அதைத் தாண்டி தேவை இல்லாமல் பல கோடிக் கணக்கான காலக்ஸிகள்? சில வி
ஞ்ஞானிகள் இந்தப் படைப்பை UNIVERSE என்று சொல்லாமல் MULTIVERSE என்கிறார்கள்..இதே போல பல பிரபஞ்சங்களாம் ..தலை சுற்றுகிறது!

கர்நாடகாவின் சிக்-மங்களூர் மாவட்டத்தில் வருகிறது Badra wild life sanctuary .. அங்கே தான் எங்களை ட்ரெக்கிங் அழைத்துச் சென்றார்கள்.. மழைக் காடுகள் நிறைந்த பிரதேசம்..இந்த அக்னி நட்சத்திரத்திலேயே இரண்டு ஸ்வெட்டர் போட்டுக் கொள்ளும் அளவு குளிர்! செல் போன்களின் தொந்தரவுகள் இல்லாத மூன்று நாள் சொர்க்க வாழ்க்கை..
இரவானதும் ரீங்காரமிடும் லட்சக் கணக்கான பூச்சிகளின் ஒருமித்த நீலாம்பரி அதி காலையில் ஆயிரக்கணக்கான பறவைகளின் இனிய பூபாளமாக ஒலிக்கிறது ..(எனக்கு ஒரு சந்தேகம்..தன் இணையக் கவர பூச்சிகளும் பறவைகளும் சத்தமிடுகின்றன சரி..எல்லா பூச்சிகளும் ஒரே நேரத்தில் கத்தினால் எப்படி தான் அவை தத்தமது இணையின் குரலை அடையாளம் கண்டு கொண்டு
'சரி நம்ம ஆறுமுகம் தான் கூப்பிடறான், பாவம் ரொம்ப நாளா அலையறான்,,இன்னிக்கு போய் தான் பார்ப்போமே ' என்று முடிவு செய்கின்றனவோ தெரியவில்லை.மனித இனத்தில் பெண் பார்க்கப் போகும் போது பெண் தான் 'சாமஜ வர கமனா ' என்றெல்லாம் பாட்டுப் பாடி ரொமான்டிக் மூடுக்குப் போய் ஹிந்தோளத்தில் 'ரி' யை நுழைத்து அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்..ஆனால் பூச்சிகளிலும் பறவைகளிலும் ஆண் தான் அதிகம் ராகம் பாடுகிறதாம். ஆண் ரொம்ப மெனக்கெட்டு ஆலாபனை செய்து பாட்டுப் பாடி நிரவல் செய்து ஸ்வரம் எல்லாம் போட்டால், பெண் நிதானமாகக் கேட்டு விட்டு 'கூ, குக்கூ, குக்குக்கூ, என்று பதிலுக்கு வெறும் ACKNOWLEDGE மட்டும் செய்யும்..என்ன ஒரு வில்லத்தனம்!

மேலும் மனித இனத்தில் தான் பெண் அழகு. ஆம்

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள."


மற்ற இனங்களில் ஆணுக்கு மட்டும் தான் கண்ணைக் கவரும் அழகு! அந்தரியோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ' என்ற பாட்டை விட 'மன்மத ராசா மன்மத ராசா ' தான் அதிகம்.

நகர்ப் புறங்களில் தவளைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமீபத்திய சர்வே என்று சொல்கிறதாம்..இது ஏன் என்றால் நகர்ப் புறத்தில் ஆண் தவளை கத்துவது பெண் தவளைக்கு டிராபிக் இரைச்சலில் கேட்பதில்லையாம்.ஆயிரம் பூச்சிகள் கத்தினாலும் தன் இணையை சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளும் உயிர்கள் பாவம் வாகன இரைச்சலுக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை.ஆம் மனிதன் நடந்த இடத்தில் புல் முளைப்பதில்லை..உலகிலேயே கொடூரமான மிருகம் எது என்று கேள்விக்கு 'ஹாய் மதனில்' 'மனிதன்' என்று அவர் அளித்த விடை ஞாபகத்தில் வருகிறது

..நடுக் காட்டில் பச்சை வண்ணம் அடிக்கப்பட்ட,சுவர்களில் மரங்கள் வரையப்பட்ட அழகாததொரு காட்டேஜ் கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு பின் புறத்தில் பத்ரா நதி மெல்லிய சலசலப்புடன் விஸ்தாரமாக ஓடி வருகிறது.. அருகே ஓர் அழகான சிறிய பிள்ளையார் கோயில்..அப்படிப்பட்ட அழகிய சூழலில் அமர்ந்து கொண்டு
பூச்சிகள் பற்றியும் , பறவைகள் பற்றியும் ,பாம்புகள் பற்றியும் ஏராளமான சுவையான தகவல்களை அந்த கேம்ப்-இன் போது இயற்கை விஞ்ஞானிகள் எடுத்துச் சொன்னார்கள்..புலி கிலி வந்து விடுமோ என்று பயமாகவே இருந்தது. ஆனால் கடைசி வரை ஒரு புலி கூட கண்ணில் தட்டுப் பட வில்லை. :-(

காட்டின் அமைதி கெட்டு விடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்..அதிர்ந்து பேசாதீர்கள் என்கிறார்கள்..மிகக் குறைந்த அளவு மின் விளக்குகளையே காட்டேஜை சுற்றி உபயோகிக்கிறார்கள்..இருபது பேர் தங்கும் ஒரு பெரிய அறைக்கு ஒரு சிறிய குழல் விளக்கு மட்டும் எரிகிறது. டி.வி இல்லை..ஹீட்டர் இல்லை..விளக்குகளுக்கு மின்சாரத்தை பத்ரா நதியின்
Gravity fall கொண்டு அவர்களே தயாரிக்கிறார்கள்..காட்டுக்குள் எக்காரணம் கொண்டும் perfume களை உபயோகிக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்..இது ஏன் என்றால் இந்த வினோத வாசத்தை மோப்பம் பிடித்து விலங்குகள் வந்து விடாமல் இருக்கவும் , அவைகளில் இருந்து வெளிப்படும் கெமிக்கல்கள் காட்டில் கலந்து விடாமல் இருக்கவும் என்கிறார்கள். காமிராவில் தயவு செய்து பிளாஷ் உபயோகிக்காதீர்கள் என்கிறார்கள்..இப்போதெல்லாம் நிறைய இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்த இயற்கை ஆர்வலர்கள் ட்ரெக்கிங் செய்யும் போது விஷமிகள் சிலர் காட்டில் வீசிச் சென்று தண்ணீர் பாட்டில்களையும், குர்குரே , லேஸ் ,பான் பராக் பாக்கெட்டுகளையும் பொறுக்கி (மீண்டும் )பெங்களூருக்கு எடுத்து வருகிறார்கள்

பாம்புகள் பற்றி சொல்லும் போது: பத்து பாம்புகளுக்கு ஒன்பது பாம்புகள் விஷம் இல்லாதவை என்று சொன்னார்கள்..விஷம் என்பது பாம்பின் வாயில் ஊறும் எச்சிலாம்.மனிதன் பாம்பின் விஷத்தால் இறப்பதைக் காட்டிலும் பாம்பு கடித்து விட்டதே என்ற பயத்தால் இறப்பது தான் அதிகம். எனவே நீங்கள் அடுத்த முறை பாம்பு கடித்தால் டென்ஷன் ஆகாமல் சும்மா கையை உதறிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம்.பாம்பின் தாடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஒரு மலைப்பாம்பு ஒரு நன்கு வளர்ந்த முழு மானை அப்படியே ஸ்வாகா செய்ய முடிகிறது. மேலும் பாம்புகளின் ஞாபக சக்தி வெறும் மூன்று வினாடிகள் தானாம் (கஜினி சூர்யாவை விட ரொம்ப மோசம்) எனவே பாம்பு தன் இணையை அடித்தவனை தேடி வந்து பழி வாங்கும், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்று பாட்டெல்லாம் பாடும்..மாணிக்கத்தைக் கக்கி இரவில் இரை தேடும் என்பதெல்லாம் கட்டுக் கதை..பாம்புக்கு பயங்கர தாகமாக இருந்தால் அது தொண்டையை நனைத்துக் கொள்ள சிறிது பாலைக் குடிக்குமே தவிர தமிழ் படங்களில் வருவது போல குடம் குடமாக பாலைக் குடிக்காது


பறவைகள் பற்றி அவர்கள் சொன்ன தகவல்கள் அருமை..முதலில் ஒன்று

தூக்கணாங்குருவி கூடு கட்டி முடித்து விட்டு அதன் மனைவியிடம் சென்று பவ்யமாக 'வாம்மா மின்னலு ,வந்து கிச்சன் , ஹால், பெட்ரூம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்' என்று கேட்டுக் கொள்ளுமாம்.அது வந்து பார்த்து ஒ.கே சொன்னால் தான் உண்டு..இல்லை வாஸ்து சரியில்லை என்று சொல்லி விட்டால் அதையெல்லாம் கலைத்து விட்டு மீண்டும் வைக்கோல் சேகரித்து கூடு கட்டத் தொடங்கும். சில பாவப்பட்ட ஆண்
தூக்கணாங்குருவிகள் எட்டாவது attempt -இல் தான் பாஸ் பண்ணுமாம்..இத்தனை செய்தும் கடைசியில் வீட்டுக்குள் அய்யாவுக்கு இடம் இல்லை..மகா ராணி குழந்தைகளுடன் உள்ளே இருக்க வேண்டியது...இவர் உணவு தேடுவது, வெளியே போய் காய்கறி வாங்கி வருவது..காவல் காப்பது..இன்றைய நவீன உலக கணவர்களின் நிலை தான் அங்கும்..!

கூடு கட்டுவதில் பறவைகளுக்கு உள்ள அறிவு வியக்க வைக்கிறது..காக்காவின் கூடு வடிவத்தில் உள்ள ஸ்டேடியம் ஒன்று ஜப்பானில் உள்ளது.காகம் சில சமயம் காப்பர் கம்பிகளை எடுத்து வந்து வளைத்து வலுவான கூடுகள் கட்டுமாம்..ஒரு முறை காக்கா கூட்டில் ஒரு லேஸ் பாக்கெட் இருந்ததாம்.(evening snacks?) .கரையான்களும் தேனிக்களும் வீடு கட்டுவதில் பட்டம் வாங்காத சிவில் இஞ்சினியர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.கரையான்கள் வீடு கட்டி முடித்து விட்டு அதை AIR CONDITIONING கும் செய்கின்றன ..ப்ரோகிதரை அழைத்து கிரகப் பிரவேசம் எல்லாம் செய்யுமா தெரியவில்லை..

ஏதோ ஒரு பறவை (பெயர் மறந்து விட்டது) தன் உணவான பூச்சியை அப்படியே சாப்பிடாமல் வீட்டுக்கு பார்சல் வாங்கி வருமாம். கூடவே அந்த பூச்சிக்கு பிடித்தமான சில இலைகளையும் எடுத்து வந்து பூச்சியை தன் கூட்டில் வைத்து மனிதர்கள் ஆடு வளர்ப்பது போல சில நாட்கள் வளர்க்குமாம்..
பூச்சியும் இலையைத் தின்று கொழு கொழு என்று அப்பாவியாக வளருமாம்..அப்புறம் என்ன?குஞ்சு பொறித்து குட்டிப் பறவைகள் வெளியே வந்ததும் சுடச் சுட அவைகளுக்கு பூச்சி பக்கோடா ரெடி!

வெட்டுக் கிளிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்..அந்தப் பெயர் அதற்குப் பொருத்தம் தான்..'மேட்டர்' முடிந்ததும் இன்ப நிலையில் தன்னை மறந்து இருக்கும் ஆண் வெட்டுக்கிளியை பெண் சிரச்சேதம் செய்து விடுகிறது. எனவே வெ.கி எப்போது
ம் விதவை தான். என்னே ஒரு பதிபக்தி!.. மண்ணானாலும் மனைவி புல்லானாலும் பொண்டாட்டி கதை தான் அங்கே.. மனித இனத்தில் கூட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெண் இனம் தான் ஆண் மீது ஆதிக்கம் செலுத்தியதாக சொல்கிறார்கள்..பெண் தான் prototype , பெண் தான் basic model .. ..ஆண் எதற்கு வேண்டும் என்றால் அப்பாவியாக ஏமாந்து போய் தன் விந்தை பெண்ணுக்கு தானம் கொடுக்கத்தான்..

தற்கொலைப் படை மனிதர்களுக்கு மட்டும் தான் என்று நினைத்து விடாதீர்கள்..தேனீக்களுக்கும் எறும்புகளுக்கும் கூட தான்..ஏதாவது ஒரு புதிய இடத்திற்கு செல்லும் போது இந்த த. கொ படை தான் முதலில் செல்லுமாம். அவை திரும்பி வந்தால் அந்த இடம் Safe ..இல்லை என்றால் அடுத்த நாள் ஹிண்டு பேப்பரில் 'இறைவனடி சேர்ந்தார்' என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளம்பரம் கொடுத்து விட வேண்டியது!

சரி இன்னும் இந்த கேம்ப் பற்றி சுவையான தகவல்களை அடுத்த கலைடாஸ்கோப் இல் சொல்கிறேன்.

ஓஷோ ஜோக்
=============

ஒரு தம்பதி காட்டில் விலங்குகளைப் படம் பிடிக்க சென்றிருந்தார்கள்..தற்காப்பிற்காக ஒரு துப்பாக்கியும் இருந்தது

நீண்ட நேரம் கழித்து நடுக்காட்டுக்கு வந்து விட்டிருந்தார்கள்.. அங்கே ஒரு பயங்கர சிங்கம் தோன்றி அந்த மனைவியைப் பிடித்துக் கொண்டு விட்டது..

மனைவி " ஷூட் இட் ஜான் , ஷூட் இட் என்று கத்தினாள் "

அதற்க்கு அவன் " ஐயோ, அன்பே என் காமிராவில் பிலிம் தீர்ந்து விட்டது " என்று பதிலுக்குக் கத்தினான்.


முத்ரா




11 comments:

Athiban said...

I think Snakes never drink milk..

சங்கர் said...

நல்ல ட்ரெக்கிங், வாராவாரம் காடு, மலை சுத்துற யோசனை இருந்தா
இங்கே வாங்க

பொன் மாலை பொழுது said...

very interesting facts and topic.

G.M Balasubramaniam said...

நிறைய விஷயங்கள் படிக்கும்போது ஏற்கெனவே கேள்விபட்டிருப்பது நினைவுக்கு வருகிறது. அனாயாசமாக எளிதாக விளக்குகிறீர்கள். பாராட்டுக்கள்.

ஷர்புதீன் said...

wishes madhu!

Katz said...

vanavaasamo?

M.G.ரவிக்குமார்™..., said...

அன்பின் மது,உங்களின் பதிவுகளை தோடர்ந்து வாசிப்பவன் எனினும் இதுவே என் முதல் பின்னூட்டம்.
உங்கள் கலைடாஸ்கோப்பின் பிரியன் நான்!...அதில் படித்த விஷயங்களை என் நண்பர்களிடம் பகிர்ந்து வருகிறேன்!...
இன்னும் நிறைய எழுதுங்கள்........வாழ்த்துகள்!.....

bandhu said...

நிறைய தகவல்கள்! திகட்டவே இல்லை! அருமை!

thakkudu said...

அழகாகவும் எளிமையாகவும் இருக்கும் உங்க சொல்லும் விதம் ரசித்தேன். யோகம் பண்ணினவர் சார் நீங்க! இயற்கையை ரசிச்சு அதை வார்தைகளில் வடிக்கிறீர்கள்.

தக்குடு

நெல்லி. மூர்த்தி said...

ஆஹா... உங்களுடன் நாங்களும் வனத்தினில் நடைபயின்றது போலிருக்கின்றது. சுவாரசியமானத் தகவல்கள்!

Kumky said...

சுவாரஸ்ய நடை...

சலிக்காத தகவல்கள்...

தொடரவும்..தொடர நாங்கள்....

நன்றி சமுத்ரா.